ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம், தொகுப்பாசிரியர் பி. மகாதேவ அய்யர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 320, விலை 400ரூ.

1946-ல் ‘நர்மதா ரஹஸ்யம்’ என்று ஹிந்தியில் வெளியான நூலில், வடநாட்டில் உருவான நர்மதா நதியின் மகிமை குறித்த பல்வேறு விஷயங்கள் தொகுக்கப்பட்டு பலரது கவனத்தைக் கவர்ந்தது.

மகிமைகளை தொகுத்து ஒரு நூல் வெளியாக வேண்டும் என்ற ஆவல், காஞ்சி மடத்தின் மஹா பெரியவராக இருந்த மறைந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்குத் தோன்ற, அதன் அடிப்படையில் இந்நூல் உருவானது.

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்மிகளின் ஆசியுடன் 1962-ல் இந்நூல் முதல் பதிப்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அது இரண்டாம் பதிப்பாக வெளியாகி உள்ளது.

நமக்கு சாதாரணமாகத் தெரியும் காவேரி நதி, சித்தர்களாலும், முனிவர்களாலும், தேவர்களாலும், தெய்வங்களாலும், வேத, இதிஹாஸ புராணங்களாலும், இலக்கியப் பாடல்களாலும் அதன் புனிதத் தன்மை எவ்வாறெல்லாம் போற்றப்பட்டுள்ளது என்பதை இந்நூலில் படிக்கும்போது மிக வியப்பாக உள்ளது.

‘எவன் காவேரியில் எந்த இடத்திலாவது நீராடி, பரமேசுவரனை உள்ளத்தில் வைத்து பூஜித்து வழிபடுகிறானோ, அவனுடைய பாவங்கள் எல்லாம் விலகி, உலக பந்தமும் அற்றுப்போய், ஈசனைக் காண்கிறான்’ என்று பிரும்ம புராணம் கூறுகிறது. இப்படி காவேரியின் மகிமைகள், அதற்கான காரணங்கள், காவேரி ஸ்நான பலன்கள், அதன் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள புனிதத் தலங்கள்,அவற்றின் வழிபாட்டு விசேஷங்கள், இப்பகுதிகளில் வசித்த மஹான்களின் வரலாறுகள்… என்று பல தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காவேரிக் கரையில் ஒரு பகுதியான மயிலாடுதுறையில் சிறப்பாக இம்மாதம் (செப்டம்பர்) 12ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காவேரி புஷ்கரத் திருவிழா நடைபெறுகிறது.குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயருவதால், இவ்விழாவில் கலந்துகொண்டு காவேரியில் நீராடும் பக்தர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இந்த புஷ்கரத் திருவிழா குறித்த சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 20/9/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *