பெண் எனும் பொருள்
பெண் எனும் பொருள், பெண்கள், குழந்தைகள் லிடியா காச்சோ, தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், விலை 350ரூ.
இது நாம் அறியாத உலகம். புலப்படாத புதிர். இடைவிடாது நடக்கும் பயங்கரம். நாளொன்றுக்கு உலகமெங்கும் பெண்களும், குழந்தைகளுமாக, இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் உணர்ந்து அறியாத மாய உலகிற்கு கடத்தப்படுகிறார்கள். படு பயங்கரமான வலைப்பின்னல் கொண்ட தொடர்ச்சி இது.
இந்த பயங்கரங்களைக் கேட்டு உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயணித்து, துணிச்சலாக தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார் லிடியா. பெண்களைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, பாலியல் தொழிலுக்கு மூளைச்சலவை செய்து பயன்படுத்துவது எல்லாம் கண்ணியத்தின் எந்த சாயலும் இல்லாத நிகழ்வுகள். இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் கற்பனை இல்லை. பதற வைக்கும் உண்மைகள். மாஃபியாக்கள் கொள்ளை இலாபத்தை கொட்டிக் குவிக்கும் அறக்கொடுமை. ஆயுதமும், போதைப் பொருளும் தரும் லாபத்தைவிட பாலியல் வர்த்தகம் தரும் லாபக் கணக்கைப் பார்த்தால் துணுக்குறுகிறது.
இந்தப் பின்னலில் சிக்கிக் கொண்டவர்கள், மீண்டவர்கள், துவண்டவர்கள், துயரத்தின் கடைசி துளியை அருந்தியவர்கள் வரைக்கும் எல்லாமே நெஞ்சு துடிக்கும், இரத்தம் உறைய வைக்கும் பதிவுகள்.
நன்றி: குங்குமம், 17/2/2017.