பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள்

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள், பதிப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.545, விலை ரூ.500.

பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்து, ஆய்வுரை எழுதி வெளியிட்ட காத்தவராயன் கதைப் பாடல், வள்ளியூர் வரலாறு (ஐவர் ராஜாக்கள் கதை), முத்துப்பட்டன் கதை, கான்சாகிபு சண்டை ஆகிய நான்கு கதைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு கதைப் பாடல் குறித்தும் நா.வானமாமலை எழுதிய முன்னுரை(ஆய்வு)ரைகளும் இடம் பெற்றுள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கதைப் பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

கன்னடிய மன்னர்களுக்கும், தென்தமிழ் நாட்டில் பரவிய பாண்டியச் சிற்றரசர்களுக்கும் போர்கள் நடைபெற்ற காலங்களிலும், அதற்குப் பிறகு மதுரை நாயக்கர்களுக்கும், இராமநாதபுரம் பாளையக்காரருக்கும் போர்கள் நடைபெற்ற காலங்களிலும், அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தின் தென்பகுதியில் பரவியதை எதிர்த்துப் பாளையக்காரர்கள் போர்கள் நடத்திய காலங்களிலும் இக் கதைப் பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றை இலக்கியங்கள், கல்வெட்டுகள் மூலம் அறியலாம் என்றபோதிலும், அவை அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களின் ஆவணங்களாகவே பதிவு பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதற்கு மாறாக, மக்களின் கருத்துகளை- வாழ்க்கையை அறிய மக்களிடம் வழங்கிவரும் நாட்டுப்புற கதைப்பாடல்கள் உதவுகின்றன. பழைய வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றைய சமூகம் இருப்பதால், இன்றைய சமூகப் பிரச்னைகளின் வேர்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

நன்றி: தினமணி, 1-1-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *