பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு
பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.200, விலை ரூ.120.
முதலாழ்வார்களுள் முதன்மையானவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். இவர் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளர்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்)காட்டியவர். முன்னோர் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்.
மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவர்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளார்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சர்வ இரட்சகனையும் இரட்சிக்க வழிதேடித் தருவதுபோல் திருப்பல்லாண்டு பாடியுள்ளார்; அதனால் ‘பெரியாழ்வார்’ எனும் திருநாமம் பெற்றார்’ என்பது மணவாள மாமுனிகளின் வியாக்கியானம்.
‘பெரியாழ்வார் போற்றும் பிள்ளைத்தமிழ் துறவிகளைக்கூட கொஞ்ச வைக்கக் கூடியது. மற்றைய ஆழ்வார்கள் கீதாசாரியன் எனும் அடிக்கரும்பைப் பாடியிருக்கிறார்கள்; பத்து அவதாரங்கள் எனும் நடுக்கரும்பைப் பாடியிருக்கிறார்கள். ஆனால், பெரியாழ்வார் கண்ணனுடைய பிள்ளைமை என்கிற தோகைக் கரும்பைப் பாடியிருக்கிறார். அடிக்கரும்பினும், நடுக்கரும்பினும் இருக்கின்ற சுவை, தோகைக் கரும்பிலே இருக்காது என்றாலும், தோகைக் கரும்பு வந்தததற்குப் பின்னால்தான் நடுக்கரும்பும் அடிக்கரும்பும் தோற்றம் பெறும். மேலும், ஆழ்வார்கள் அமுதத்திற்குத் தோகைக் கரும்பு தோரண வாயிலாகவும் அமைகிறது’ என்கிற நூலாசிரியரின் இலக்கியச் சுவை மிக்க அற்புதப் பதிவு, நூலை ஒருமுறைக்கு இரு முறை படிக்கத் தூண்டுகிறது.
‘ஒரு கருத்தைச் சொல்லும் ஒரு பாசுரம், இன்னொரு கருத்தையும் உள்ளடக்கியிருக்கும் வகையில் பாசுரங்களைக் கட்டமைக்கும் திண்மை பெற்றவர் பெரியாழ்வார்’ எழுத்து வடிவம் பெறாத சில மரபுகளைப் படைத்துக் காட்டியதுடன், வைணவ சித்தாந்தங்களோடு அறிவியல் நோக்கிலும், அன்பு நோக்கிலும் பாசுரங்களை இயற்றியவர். இதுவரை யாருமே பதிவு செய்யாத பல நுட்பமான, நுணுக்கமான விஷயங்களைப் பிள்ளைத்தமிழில் பதிவு செய்திருப்பதையும்; ஆழ்வார் பாசுரங்களில் இதுவரை எழுதப்படாத சுவையான செய்திகளையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது.
நன்றி: தினமணி, 06-04-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818