பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)
பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்), எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, விலை 225ரூ.
“மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்” என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.
‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரைப் போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. எத்தனையோ அரசியல்வாதிகள் வந்து போய்விட்டார்கள். ஆனால், அவர் மீது மட்டும் ஏன் இந்த மயக்கம்… ஏன் இந்தக் கிரக்கம்? அவரேஅப்படித் தன்னை வடிவமைத்துக் கொண்டாரா?
“எம்.ஜி.ஆர். எனும் ஆளுமையின் தாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சம் அவர் வெறுமனே அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் ஒரே சமயத்தில் திகழ்ந்தார் என்பதே ஆகும். எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் புகழ் திரைப்படங்கள் அவரின் வெற்றிகரமான வேடங்களைச் சார்ந்தே இருந்தன.
ஐம்பதுகளில் தொடங்கி எம்.ஜி.ஆர். திரையில் தனக்கான மரபு மாறாதப் பிம்பத்தைப் புகழ்பெற்ற சொற்றொடர்கள் உள்ளுணர்வுகள் மூலம் கவனமாக உருவாக்கினார். கதை வடிவம், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றில் தலையிட்டு அவை தன்னுடைய பிம்பத்தோடு ஒத்துப்போவதாகவும் அதை வலுப்படுத்துவதாகவும் அமைவதை அவர் உறுதி செய்துகொண்டார்” என்று மிகச் சரியான அடையாளம் காணுகிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன்.
“எம்.ஜி.ஆரும் ஆற்றல் படைத்த, ஆனால், விளிம்புநிலை மக்களைக் கவர்ந்த வில்லன்தான்” என்றும் உருவகப்படுத்துகிறார் பாண்டியன். திரையில் ஆபத்பாந்தவனாக காட்சி அளித்த எம்.ஜி.ஆர். முதல்வராக ஆனபிறகு நடைமுறை யதார்த்தத்தில் எப்படி நடந்துகொண்டார் என்பதை பல்வேறு சான்றுகளுடன் இந்தப் புத்தகம் அலசுகிறது.
“எம்.ஜி.ஆரிடம் அடித்தட்டு வர்க்கம் கொண்ட அரசியல் பக்திக்கான காரணம், அவர் தன்னுடைய 11 வருட கால ஆட்சியில் மகத்தான புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல” என்பதையும் அம்மபலப்படுத்துகிறார் பாண்டியன். எம்.ஜி.ஆர். இறந்தபிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், பாண்டியன் இறந்தபிறகு தமிழுக்கு வருகிறது.
தமிழகத்தில் வாழ்ந்த, ஆனால் இந்திய அறிவுலகம் மெச்சத்தக்க ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.எஸ். பாண்டியனின் அனைத்து எழுத்துக்களும் தமிழுக்கு எடுத்துவர வேண்டும். இந்த நூலைக் கொண்டுவர முயற்சித்து அதில் வெற்றியும் கண்ட பேராசிரியர் ஆனந்தி, விலாசி, பூ.கொ. சரவணன் ஆகிய மூவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழின் அறிவு முகம். அதைத் தமிழர்கள் அறியாமல் இனியும் இருத்தல் ஆகாது.
-புத்தகன்.
நன்றி: ஜுனியர் விகடன், 19/6/2016.