கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230.

இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல்.

கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ என்ற அரசகுல மராட்டிய பிராமணப் பெண்ணை பற்றிய கதைதான் இது.

சுயநலத்துக்காகவும், சொத்துகளை அபகரிக்கும் திட்டத்துடனும், அந்தக் கால வழக்கப்படி கணவன் இறந்ததும், உடன்கட்டை ஏற வற்புறுத்தப்படும் கிளாவரிந்தாபாய், லிட்டில்டன் என்ற கிழக்கிந்திய கம்பெனி ராணுவ அதிகாரியால் மீட்கப்படுகிறார். அவரைத் தொடர்ந்த துன்பங்களில் இருந்து நிரந்தரமாக அவரை விடுபட வைத்த லிட்டில்டனின் உயர்ந்த குணங்களால் ஈர்க்கப்படுகிறார்.

காதல் வயப்பட்ட லிட்டில்டன், “இந்திய நாட்டின் ஒளி மலர்’ என்ற பொருள்படும் “கிளாரிந்தா’ பெயரை அவருக்குச் சூட்டுகிறார். அறப்பணிகளில் ஆர்வம் காட்டிய கிளாரிந்தா, கிறித்துவ மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஞானஸ்நானம் பெற விரும்புகிறார். தொடர்ந்து அறப்பணிகளில் ஈடுபடும் அவர், லிட்டில்டன் இறப்புக்குப் பிறகு ஞானஸ்நானம் பெறுகிறார்.

இறுதியில் பாளையங்கோட்டையில் தான் எழுப்பிய புனிதக் கோயிலின் கல்லறையில் அடக்கம் பெறுகிறார் கிளாரிந்தா.

பெண் கல்வி, விதவை மறுமணம், இந்து-கிறித்துவ மதங்களுக்கிடையே ஏற்படும் நெருங்கிய உறவு, காம இச்சைக்கு அப்பாற்பட்ட புனிதமான காதல் என பன்முகத்தன்மைகளைப் பிரதிபலிக்கும் சிறந்த வரலாற்று நாவல் இது.

நன்றி: தினமணி, 6/6/2016.

Leave a Reply

Your email address will not be published.