பொலிக பொலிக!
பொலிக பொலிக!, பா.ராகவன்,கிழக்கு பதிப்பகம், பக்.464, விலை ரூ.325.
‘பொலிக பொலிக பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம் 39’ என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. அதினின்றும் கிடைத்தது இந்தப் புத்தகத்தின் பெயர்.
ஸ்ரீவைஷ்ணவத்தை ஆயிரமாண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக நிறுவிய ராமானுஜரின் ஜீவசரிதத்தை விவரிக்கிறது நூல். பாரத ஆன்மிக
மரபின் ஜெயக்கொடியை நாட்டிய மனித நேய வள்ளலின் வாழ்க்கைக் கதை, சம்பவ வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.
எனினும் கற்பனை கட்டற்றுப் போகவிடாமல், வரலாற்று விவரங்களின் அடிப்படையில் இதனைப் படைத்திருக்கிறார் பா.ராகவன். காட்சி வர்ணனைகள் நம்மை அந்தக் காலகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.
இந்தப் புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்- ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்களை எளிய நடையில் இன்றைக்கு நம் கண் முன்னே கொண்டு வருகிறார்
சித்தாந்த தர்க்கங்களையும் அவர் எளிமையாகக் கையாள்கிறார். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள மூத்த வயதினர் மட்டுமின்றி, எல்லா வயதினரும் சுகமாகப் படித்து இன்புறலாம், பயன் பெறலாம்.
இந்தப் புத்தகத்தை இயற்ற ராமானுஜரின் வரலாற்றைக் கூறும் பல முன்னோடி சரித்திர நூல்களையும் ஆவணங்களையும் நூலாசிரியர் பா.ராகவன் ஆராய்ந்து பயன்படுத்தியிருக்கிறார். இருந்தபோதிலும், வரலாற்றுக் கட்டுரை வடிவத்தின் இறுக்கம் இல்லாமல், ஒரு படைப்பு இலக்கிய நூலைப் போல வடித்திருக்கிறார்.
நன்றி:தினமணி, 2/7/17