புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்
புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.136; விலை ரூ.100.
1972 இல் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்காக தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூரை விட்டுக் கிளம்பிய நூலாசிரியர், அதற்குப் பிறகு அங்கே தொடர்ந்து வாழவில்லை. சொந்த ஊரைப் பிரிந்து 50 ஆண்டுகளானாலும் அதன் நினைவுகளில் அவர் எப்போதும் மூழ்கிக் கிடந்திருப்பது நூலைப் படிக்கும்போது தெரிய வருகிறது.
மழை பெய்தால் நிறையும் கண்மாய். கண்மாய் நீரை நம்பி விவசாயம். மழையில்லாவிட்டால் புல்,பூண்டு, செடி, கொடி இல்லை. எங்குநோக்கினும் திறந்தவெளி. சிறுதானியங்கள் விளையும் பூமி. தோசை சாப்பிடுவதே அரிதான ஒரு நிகழ்வு. இந்த வறட்சியான மண்ணில் மனிதம் உயிர்ப்போடு, அந்த மண்ணுக்கேயுரிய பழக்க, வழக்கங்களுடன், அழகுடன் மிளிர்ந்திருக்கிறது. நூலாசிரியர் அவற்றைத் துல்லியமாகச் சித்திரித்து நம்மை அந்த காலத்துக்கு, அந்த உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அந்த சிறிய கிராமத்தில் தையல் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் தனது குழந்தைகளை வளர்க்கும் கணவனைப் பிரிந்த கனியக்கா, தி.ஜானகிராமனின் நூல்களை சிறுவனாக இருந்த நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்துவது, பெட்டிக் கடை வைத்திருந்த ஆனந்தியம்மாள் வெம்பூர் பஞ்சாயத்துப் போர்டின் உறுப்பினராகவும், பெண்ணியவாதியாகவும் இருந்தது, தபால்காரர் பிச்சை தபால் தருபவராக மட்டும் இல்லாமல், இளம் வயதினராக இருந்த நூலாசிரியருக்கு பந்தல்குடியில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை படிப்பதற்காக வாங்கித் தந்தது என பல வித்தியாசமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.
கோவில் திருவிழாக்கள், மரணச் சடங்குகள், பாவைக்கூத்து, சேத்தாண்டி ஊர்வலம், சித்திரைக் கொண்டாட்டம், கார்த்திகை விழா என ஒவ்வொன்றிலும் நிகழ்த்தப்படும் பலவிதமான நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக, மிக நுட்பமாக, நூலாசிரியர் விவரித்துச் செல்வது அற்புதம்.
தன்னுடன் பழகிய மனிதர்கள் பற்றி, ஊரில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தவர்கள் பற்றி, ஊரின் கண்மாயைப் பற்றி, கண்மாய் வற்றிய பின் அதில் கூட்டமாக மக்கள் மீன் பிடிப்பதைப் பற்றி, கண்மாய்க்கு நீர் வரும்போது அந்த நீரில் பிற பகுதிகளில் இருந்து அடித்துக் கொண்டு வரப்பட்ட கரம்பை மண்ணுக்காக பக்கத்து ஊர்க்காரர்களுடன் நடக்கும் சண்டை பற்றி, தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள், கணவனைப் பிரிந்த மனைவி, மனைவியைப் பிரிந்த கணவன், நிலவுடைமையாளருக்கும் அதில் வேலை செய்தவர்களுக்கும் அப்போதிருந்த உறவுகள் என பழைய நிகழ்வுகளை சுவையாக நூலாசிரியர் விவரித்தாலும், அவற்றைப் பற்றிய விமர்சனரீதியிலான கருத்துகளை நூல் முழுக்க வெளிப்படுத்த அவர் தவறவில்லை. அன்றைய வாழ்க்கையின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய அரசியல், பொருளாதாரநிலைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் இந்நூல் உதவுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிராம வாழ்க்கையைப் பற்றிய ஆவணமாக, உயிர்ப்பான சித்திரிப்பாக, மிளிரும் குறிப்பிடத்தக்க நூல்.
நன்றி: 3/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029471.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818