பூர்வா
பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ.
பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா!
தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு.
எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதைப் பார்த்து, 149, 150 என்று எண்ணிக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிற சிறுமியின் விடுமுறை சுகத்தைக் கெடுப்பதற்காகவே வந்த மாதிரி அறிமுகமாகிறார் ‘ஸ்வாமித் தாத்தா’. ஆனால் சிறுமியின் நினைப்பை அப்படியே மாற்றி மாயாஜாலங்கள் நிறைந்தது போன்ற ஒரு தனி உலகத்துக்கே இட்டுச் சென்று பரவசப்படுத்துகிறார் அந்தக் கிழவர்.
‘கால யந்திரம்’ மாதிரியான பின்னோக்கிச் செல்லும் அனுபவம்தான். சிறுமி பூர்வாவை அந்தந்த ஆழ்வார்களின் காலத்துக்கே அழைத்துப் போய் அவர்களின் திவ்ய சரிதங்களை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள வைக்கிறார் தாத்தா. குழந்தைக்கு ஏற்பட்டிருக்க கூடியதைவிடவும் அதிகமான பிரமிப்பு நமக்கே ஏற்படுகிறது.
ஒரு யாத்திரை மாதிரி போய்வர அழைக்கும் தாத்தாவின் பேச்சில் மிரண்டுபோகிறாள் சிறுமி. ‘வழியெல்லாம் பஜனை செய்துகொண்டே வருவாரோ? அப்படியானால் பயணம் தீர்த்த யாத்திரை ஆகிவிடுமே? கற்பனை அவளை உரக்கச் சிரிக்கச் செய்கிறது’ என்று ஆசிரியர் எழுதுவது அழகான கவிதை.
அந்தந்தக் காலங்களில் வாழ்கிறவர்களைத் தாத்தாவும் பேத்தியும் பார்க்கலாம். ஆனால் அவர்கள் கண்களுக்கு இவர்கள் தென்படமாட்டார்கள் என்ற கதைசொல்லியின் உத்தி நூலுக்குச் சுவை சேர்க்கிறது. அருமையான புத்தகம். அழகான வண்ணப்படங்கள். குழந்தைகளுக்கு தைரியமாகப் பரிசளிக்கலாம்.
-சுப்ர. பாலன்.
கல்கி, 4/9/2016.