கந்தர்வன் காலடித் தடங்கள்
கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ.
மானுடம் பாடிய கவிஞர்!
கவிஞர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட கந்தர்வன் சம அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு கதையை எழுதி முடித்ததும் அதைத் தன் மனைவி, மகள்கள், மருமகன்கள் என்று அனைவரிடம் படிக்கத் தந்து விமர்சனம் பெற்ற பிறகே பத்திரிக்கைக்கு அனுப்புவாராம். எத்தனை பேருக்கு இத்தகைய மனவளமும் நம்பிக்கையும் வாய்க்கும்?
‘மண் பொய் பேசுவதில்லை.மிதிக்கிறோம்,
மரங்கள் பொய் பேசுவதில்லை.வெட்டுகிறோம்,
மந்திரி பொய் பேசுகிறார். மாலை போடுகிறோம்’
என்று பாடுவார்.
‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’
என்று பரிவோடு எழுதுவார்.
‘ஏழை நாடுகளிடம் ஏகாதிபத்தியம் சந்தை கேட்கும், இல்லையேல் சண்டைக்கழைக்கும்’
என்று எள்ளி நகையாடுவார்.
‘ரத்தம் குடுத்தவங்க கிட்டே நான் ஜுசுக்குக் காசு வாங்குகிறதில்லே. வச்சுக்குங்க’ என்று சொல்கிற கடைக்காரர் பாத்திரம் மூலமாக மனிதநேயத்தை தொட்டுக்காட்டுவார்.
பாவப்பட்டவர்களின் வாழ்க்கை அவலங்களை அப்பட்டமாகப் படம் பிடிப்பார் கந்தர்வன். கந்தர்வனது பாடுகளம், சமுதாய சங்கல்பம் உட்பட ஐந்து பிரிவுகளில், மறைந்தும் மறையாமல் வாழும் கந்தர்வனின் எழுத்துக்களை அப்படியே பதிவு செய்கிறார் புலவர் சை. சங்கரலிங்கம். ‘கந்தர்வனின் காலடித் தடங்கள்’ என்ற தலைப்பிலான இந்த நூலைப் படித்து முடித்ததும் அவருடைய எழுத்துக்கள் முழுமையையும் உடனே படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் உண்டாவது நிஜம்.
-சுப்ர. பாலன்.
கல்கி, 4/9/2016.