மண்ணும் மக்களும் அழிவை நோக்கி
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ.
உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!?
முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை.
‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் ஓட்டம் இருந்தாக’ வேண்டும். தற்போது ஆறுகளில் உள்ள மணலைச் சேமிப்பாகக் கருதி, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் கிடைக்கும் மணலின் அளவை மட்டுமே அள்ள வேண்டும் என்கிறார் கட்டுரையாளர்.
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை மாநகரம் வரலாறு காணாத வெள்ள அவலத்தில் சிக்குவதற்கு முன்னால் வெளியான நூல் இது. அந்த அனுபவத்தை நேரடியாக உணர்ந்தவர்கள் இப்போது அவசியம் படிக்கவேண்டும். முன்பே கல்கியில் ளியான கட்டுரைதான் எனினும் தொகுப்பாகப் படிக்கும்போது நிலைமையின் தீவிரத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடியுமே.
‘1992 ஆம் ஆண்டு வைகையில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது, மதுரை நகரின் செல்லூர்ப் பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. நெசவுத் தொழிலுக்குப் பெயர்பெற்ற செல்லூர் அந்த வெள்ளத்தின்போதுதான் அந்த தொழிலை முற்றிலுமாக இழந்தது.
அதனை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்தன. கட்டுமானத் தொழிலாளர்களாக மாறிப்போயினர். வெள்ள வடிகால் முறையாக இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று’. இப்படிச் சொல்கிற ஆசிரியர் தமிழகத் திருக்கோயில் குளங்களைச் சீராக்க வேண்டியதன் அவசியத்தைத் தனிக் கட்டுரையில் எழுதுகிறார்.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மட்டும் 2359 குளங்கள் உள்ளன என்றும், இவற்றில் 55 சதவிகிதமே நல்ல நிலையில் உள்ளன, ஆயினும் பெரும்பாலானவைகளில் நீர் இல்லை என்றும் கூறுகிறார். பழைய பொருட்கள் என்று ஆண்டுக்கு லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றனவாம்.
‘கிட்டத்தட்ட நூறு நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியா உள்ளது’ என்று ஆசிரியர் குமுறுவது அனைவரின் காதுகளிலும் விழவேண்டும்.
– சுப்ர. பாலன்.
கல்கி, 4/9/2016.