பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ.

பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார்.

தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார்.

வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் உருவானது எப்படி? என்பதை உபநிஷத் மூலம் விளக்கியுள்ளார். உலகாயதம், சாருவாசகம், சமணம், பவுத்தம், சாங்கியம், பூதவாதம் போன்ற இந்தியத் தத்துவங்கள் அனைத்தையும் கொட்டிக் குவித்து, அலசி ஆய்ந்துள்ளார்.

சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசமும் ஒப்பிடுகிறார். முகத்திற்குள் மீசை கச்சசிதமாக இருப்பது அழகு. ஆனால் சிலர், பெரிய மீசைக்குள் முகத்தை வைத்ததைப் போல், 44 பக்கத்திற்கு, ‘முகவுரை’ எழுதி, பாதி புத்தகத்தில் பொருளடக்கம் எழுதியுள்ளது இயல்பாக இல்லை. முகவுரை மூன்று பக்கத்தில் இருக்கலாம். அது விரிவுரையாகலாமா? முடிவில் அறிவியலுடன் பிரம்மத்தை இணைத்துக் காட்டிய நூலாசிரியர் சிந்தனைத் திறன் பிரம்மிக்க வைக்கிறது.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 25/12/2016.

Leave a Reply

Your email address will not be published.