ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ.

மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன்.

குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, பள்ளியில் உயர் வகுப்பில் படிக்கும் மகளைத் தன் அன்பின் அரவணைப்பிலேயே வளர்க்கிறாள்.

நிறுவனர்களின் மாறுபட்ட மனப் போக்குகள், சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்னைகள், ஊழியர் சங்கங்களின் குறுக்கீடுகள் என்று பலவற்றை எதிர்கொண்டும், அனுசரித்தும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அவள் சொந்த வாழ்க்கையில், தன் ஒரே மகளை நிர்வகிக்க முடியாமல் திணறுகிற கதைப் புலம் சிறப்பாக உள்ளது.

மகளுடனான பனிப்போரை எதிர்த்து வெல்ல முடியும்தான் என்றாலும், நல்ல ஒரு தாயாக தோற்றுக் கொண்டிருக்க வேண்டிய சூழலை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பற்றுக்கோடு எதுவும் இல்லாத நிலையில், மகளே தன் உலகம் என்று வாழும் தாயின் விரக்திகள் எல்லாமே நெகிழ்த்துகின்றன. பல்வேறு நிலைகளில் தன்னைச் சமரசப்படுத்திக்கொள்ள முடியாத தருணங்கள் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மொழிபெயர்ப்பில் இன்னும் எளிமை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

-கவிஞர் பிரபாகரபாபு,

நன்றி: தினமலர், 25/12/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *