புனிதர் அன்னை தெரசா

புனிதர் அன்னை தெரசா, குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ.

கிறிஸ்தவ மதத்தில் இறை அருள் பெற்றவருக்கு, கத்தோலிக்க திருச்சபையால் வழங்கப்படுவதே ‘புனிதர்’ பட்டம். சமீபத்தில் அத்தகைய பட்டத்தைப் பெற்றவர் மறைந்த அன்னை தெரசா. தவிர, இவர் உலகின் மிக உயர்ந்த பரிசான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அன்னை தெரசா, ‘நான் ஒரு இந்தியப் பெண்.

இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்’ என்று முழங்கியவர். இப்படி இந்தியாவுக்குப் பல பெருமைகளை சேர்த்துள்ள இவர் எப்படி இந்தியா வந்தார். இந்தியா இவரை எந்த வகையில் கவர்ந்தது. கொல்கத்தாவில் இவர் புரிந்த சேவைகள் என்ன. இவரது சேவைகளில் மாறுபட்ட கருத்துடையவர்கள் இவருக்கு இழைத்த அவமானங்கள். அவற்றை பொருட்படுத்தாது ஏழை எளியவர்கள், போலியோ நோயாளிகள், பிறவிக் குறைபாடு உடையவர்கள், முறை தவறி பிறந்த குழந்தைகள், ஆதரவற்று தெருவில் விடப்பட்ட முதியோர்கள்… என்று பலருக்கும் மதம் தாண்டி பாசம் காட்டி பராமரித்த சேவைகள், தொழு நோயாளிகளை அருவருப்பின்றி தூக்கி எடுத்து அரவணைத்து புரிந்த மருத்துவ சேவைகள்… இப்படி அன்னை தெரசா பலருக்கும் இல்லம் அமைத்து இலவசமாக புரிந்த சேவைகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் விரிவடைந்த அவரது பணிகள், அவரது இறுதி நாட்கள், அவருக்கு கிடைத்த பல நாட்டு விருதுகள், அவரால் மறக்க முடியாத நிகழ்ச்சிகள், புனிதர் பட்டம் கிடைத்த விதம்… என்று அந்த புனிதவதியின் பல்வேறு தகவல்கள் இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 16/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *