இரத்தமே உயிரின் ஆதாரம்

இரத்தமே உயிரின் ஆதாரம், டாக்டர் டி.பி.ராகவ பரத்வாஜ், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 120ரூ.

ஒருபுறம் நெடுஞ்சாலை விபத்துகளில் ரத்த ஆறு பாய்ந்தோட, மறுபுறம் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ரத்த வகை கிடைக்காமல் அலறி ஓடுவது நாடெங்கும் காணும் காட்சி. ரத்தமில்லாமல் உயிரில்லை; உலகில்லை.

ரத்தம் எல்லா ஜீவராசிகளுக்கும் சிவப்பே என்பதில் இயற்கை மீதொரு வியப்பு தோன்றுகிறது. எந்த ஒரு வியாதியைச் சொல்லி மருத்துவமனைக்குச் சென்றாலும் உடனே ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

பெரும்பாலான உடற்குறைபாடுகளுக்கு ரத்தத்தின் குறைபாடே காரணம். நம் ரத்தத்தின் கூறுகள் என்ன… எப்படி அதைப் பேணிக்காக்க வேண்டும்… ரத்த ஓட்டத்தின் குளறுபடியால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது.

ரத்தம் பிளாஸ்மா மற்றும் உயிரணுக்களால் ஆனது மட்டுமல்ல, ரத்தம் மனித உறவுகளையும், உணர்வுகளையும் கூட இணைக்கிறது; ரத்தம் தீர்ந்தாலும், உறைந்தாலும், குறைந்தாலும், கூடுதலானாலும் கடுமையான நோய் ஏற்படுகிறது.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிராணவாயுவை எடுத்துச் செல்வது ரத்தமே; ரத்தம் ஒரு திரவ உறுப்பு என்று நூலாசிரியர் குறிப்பிடுவது பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ரத்தம் உறைவதால் வரும் விளைவுகள், ஹீமோகுளோபின் என்னும் புரதத்தின் இயக்கம், உடல் உறுப்புகள் இயக்கத்தில் ரத்தத்தின் முக்கிய பங்கு, என எல்லாவற்றையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ரத்தப் புற்றுநோய், ரத்தத்தில் கொழுப்பு செய்யும் சேட்டைகள், பலவித நோய்க்கான மூல காரணங்கள், ரத்தத்தில் சர்க்கரையால் வரும் அவதிகள், ரத்த சோகையால் வரும் பாதிப்புகள், மரபுவழி நோய்த் தாக்குதல்கள் போன்றவற்றிற்கும் விளக்கம் கிடைக்கிறது.

பலவிதமான வியாதிகளில் இருந்து தற்காப்பு செய்து கொள்ளும் தியானப் பயிற்சிகள், மருந்தில்லா மருத்துவம், முன்னெச்சரிக்கைகள், ரத்த தான விதிமுறைகள், சமச்சீர் உணவின் அவசியம் ஆகியவற்றையும் விவரிக்கிறது இந்நூல்.

இந்தியாவின் சிறந்த மருத்துவருக்கான பி.சி.ராய் விருது பெற்ற ரத்த நோய் துறைப் பேராசிரியர் ராகவ பரத்வாஜ், ரத்தம் தொடர்பான அனைத்து விபரங்களையும் சாமானியரும் புரிந்து கொள்ளும் எளிய தமிழில் எழுதி இருப்பது மிகப்பெரிய சேவையாகும். தேவையான இடங்களில் புரிதலுக்காக மருத்துவப் பதங்களை ஆங்கிலத்தில் தந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இயல்பான நடையில் திருக்குறள், திரைப்பாடல்கள் மேற்கோள்களோடு தெளிவுகள் வழங்கப்பட்டிருப்பது நூலுக்கு கூடுதல் பலம். ஒரு மருத்துவ நூலைத் தமிழில் எளிமையாக வடிக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.

– மெய்ஞானி பிரபாகரபாபு.

நன்றி: தினமலர், 11/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *