பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ.

பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர்.

கீழைக்கு ஆதிசங்கரர் முதல் பலரும் வடமொழியில் விளக்கம் எழுதியுள்ளனர். பகவத் கீதை வெண்பா, பாரதியார் விளக்கம், கண்ணதாசன் விளக்கம், சுவாமி சித்பவானந்தர் ஆராய்ச்சி விளக்கம் எனப் பல நூல்கள் கீதைக்கு தமிழாக்கமாக வந்துள்ளன.

இந்நூலில், 18 அத்தியாயங்களும் தெளிவுரையாக விளக்கம் தரப்பட்டுள்ளன. சுலோகங்களே இல்லாமல் கருத்துக்களைத் தொகுத்துள்ளார்.

அன்றாட வாழ்வில் தோன்றும், அனைத்து விதமான சிக்கல்களுக்கும் தீர்வாக பகவத் கீதை பல்வேறு நிலைகளில் வழி காட்டுகிறது. ஐம்புலன் நுகர்விலிருந்து விடுபட்டு, ஆசையை நீக்கி, மனதை தியானத்தின் மூலம் இறைவனோடு இணைக்க வழி காட்டுவதில் யோக நிலை தொடர்கிறது.

முதல் கட்டுரை புகழும் பெருமையும் ஆதார நிதியகங்களான உபநிடதம், பிரம்மசூத்திரம், கீதை தொடங்கி, கீதையை அறிமுகம் செய்கிறது. 700 கீதை சுலோகங்களில், 574 கண்ணன் உபதேசம், 86 அர்ச்சுனன் கேள்வி, 39 சஞ்சயன் வருணனை, 1 திருதராஷ்டிரன் கேள்வி, 43 வகையான கீதைகள் உள்ளன. கீதை எழுந்த சூழலும் இரண்டாவதாக விளக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனன் விசாத யோகம் முதல், மோட்ச சந்நியாச யோகம் வரை, 18 அத்தியாயங்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. தலைப்பு விளக்கம் முதலில் முன்னுரை போல அமைந்துள்ளது. மகத்மா காந்தியை உருவாக்கிய இந்த பகவத் கீதை படிக்கிறவரைப் பக்குவம் ஆக்குகிறது.

– முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி: தினமலர், 18/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *