ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்
ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ.
நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை.
இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக பலர் விளங்க, மற்றையவர்கள் தொடுசிகிச்சை முறையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
தொடுசிகிச்சை முறையின் மூலம் மருந்தில்லாமல், பக்க விளைவுகள், செலவினங்கள் இல்லாமல் உடல்நலத்தையும், மனநலத்தையும் முழுமையாகப் பராமரிப்பதற்கான அறிமுகம் இந்நூல். இந்நூலின் மூலநூலாசிரியர் பெரில் கிரேன்.
அடிப்படைக் கோட்பாடாக சக்தி ஓட்டத்தை மையமாகக் கொண்ட இந்நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கண்மணிசுப்பு. நூலெங்கும் தொடுசிகிச்சை முறைகளும், ஒவ்வொருவரும் தமது உடலை அறிந்து கொள்வதற்கான ஏராள மான தகவல்களும் காணக்கிடைக்கின்றன.
உடலின் அனைத்து உறுப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் உடலின் அனைத்து இயக்கமும் சமநிலையில் இருந்தாக வேண்டும்.
சமநிலை தடுமாறும்போது உடல் இறுக்கம், மன இறுக்கம் இரண்டையும் தளர்த்தி சமநிலையை உண்டாக்க தொடுசிகிச்சை உதவுகிறது. சக்தி ஓட்டம் உடல் முழுதும் சீராக இருந்தால் மட்டுமே நலமாக இருக்க முடியும் என்பதே மையக்கருத்து.
உடலின் அனைத்து பகுதிகளையும் பிரதிபலிக்கும் மையங்களும் புள்ளிகளும் அவரவர் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் உள்ளன.
பாதம் மற்றும் கை விரல்களின் புள்ளிகளில் கைவிரல்களால் அழுத்தங்கள் கொடுத்து அனைத்து உடல் இயக்கத்திலும் சமநிலையை உண்டாக்குவதுதான் இச் சிகிச்சை முறை.
அவ்வாறான அழுத்தங்களின் போது நரம்புகளின் வழியாக நோயுற்ற பகுதிகளுக்குச் சமிக்ஞை அனுப்பப்பட்டு நிவாரணம் உண்டாகிறது. இதில் கைவிரல்களே சிகிச்சைக்கருவிகள். விரல் அழுத்தங்களே மருத்துவம். உடலின் அனிச்சைச் செயல்கள் எப்படி நடக்கின்றனவோ அப்படியே இந்த சிகிச்சை முறையும் வேலை செய்கிறது.
மூளையைத் தூண்டி எண்டார்பின் எனும் ரசாயனத்தைச் சுரக்கச் செய்கிறது. இந்த இயற்கை ரசாயனம் நோய்களை நீக்கும் சக்தி உடையது.
நூலில் மெரிடியன்கள் எனப்படும் 12 பிரதான சக்தி ஓட்டப் பாதைகள் பன்னிரண்டு உறுப்புகளோடு தொடர்புபடுத்தப்பட்டு விளக்கப்படுகிறது.
சிகிச்சைக்கான சூழல், அறை அமைப்பு, சாதனங்கள், முன்னெச்சரிக்கைகள், இணக்கமான மனோநிலை, சிகிச்சைக்குப் பின்பான விளைவுகள், சிலருக்கு உண்டாகும் எதிர்விளைவுகள், யார் யாருக்கெல்லாம் சிகிச்சை அளிக்கக் கூடாது போன்றவையும் விளக்கப்படுகின்றன.
ஒவ்வொருவரையும் தம்மைத்தாமே புரிந்து கொள்ளவைக்கும் பயனுள்ள நூல்.
–மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 6/8/2017.