சா
சா, கு.ஜெயபிரகாஷ், ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.120.
சாவை அழைத்துவரும் மலர்
நம்பிக்கையாக இருந்த ஒருவன் இறந்துவிட, அவனைச் சார்ந்தோர் அந்த இழப்பைக் குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது ‘கையறுநிலை’. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்கள் இது குறித்துப் பேசியுள்ளன. தமிழ்க் கவிதை வரலாற்றில், சக மனிதர்களின் இழப்பின் துயரத்தை வெளிப்படுத்தும் கையறுநிலைப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு மதிப்புமிக்க இடம் உண்டு. பெரும்பாலும் போரில் இறந்துபோன மன்னர்கள் குறித்தோ, வீரர்கள் குறித்தோதான் இவ்வகைப் பாடல்கள் அதிகமும் பாடப்பட்டன. கு.ஜெயபிரகாஷ் எழுதிய ‘சா’ குறுநாவல்கூட, தன் அன்பிற்குரியவர்கள் அனைவரும் இறந்த பின்னும் துயரங்களைச் சுமந்துகொண்டு வாழ நேர்கிற ஒருவனின் கதைதான்.
அவன் அம்மாவின் இறப்புக்குப் பிறகு, அந்த இடத்திலிருந்து வளர்த்த அக்கா, மனைவி, மகள் என அனைவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவன் மனைவி இறப்பு மட்டும் ‘வடக்கிருந்து உயிர்துறத்தல்’ பாணியிலானவை. இவர்கள் அனைவரது இறப்பையும் இணைக்கும் கண்ணியாக அவர்கள் வீட்டுச் சாமந்திப்பூ தோட்டம் இருக்கிறது. இந்த மலரின் வாசனையானது நாவலில் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாவை அழைத்துவரும் அல்லது நினைவுபடுத்தும் மலராக சாமந்திப்பூ இருக்கிறது. இளம் வயதிலிருந்தே அந்தத் தோட்டம் சார்ந்துதான் இவனது வாழ்க்கை அமைவதால், சாமந்திப்பூவின் வாசனை இவனது மூளையில் படிமமாகச் சேகரமாகிறது. அது இவனது நினைவாக உருமாற்றம் அடைகிறது. இவன் அக்காவின் தற்கொலையைப் புனைவு மர்மமாகவே கையாண்டிருக்கிறது.
அந்த முடிச்சு, வாசிப்பவரின் மனநிலைக்கேற்ப அவிழும் தன்மையிலானதாகப் போடப்பட்டுள்ளது. சம்பத் எழுதிய ‘இடைவெளி’ நாவலுக்குப் பிறகு, இறப்பு குறித்த ஒருவனின் தீவிரச் சிந்தனையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் ‘சா’. ஆனால் ‘இடைவெளி’யின் இடத்தை இந்தப் புனைவு அடைய முயலவில்லை. இந்நாவலின் முன்னும் பின்னுமாக அமைந்திருக்கும் கதைசொல்லும் உத்தியும், எளிமையான அத்தியாயப் பகுப்பும், ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் இறப்பு குறித்த பிறரின் கருத்துகளும் புனைவுக்கு வலுசேர்க்கின்றன.
சாவு, சாமந்திப்பூ, சாந்தி (அக்கா), சாதனா (மகள்), சாவித்திரி (மனைவி) என இந்நாவலில் வரும் பெயர்களின் ஒட்டுமொத்த படிமம்தான் ‘சா’. அடுத்தடுத்த இறப்புகளால் மனப்பிறழ்வுக்குள்ளாகும் ஒருவனது மனநிலை எப்படியெல்லாம் சிந்திக்கும் என்ற கோணத்திலும் நாவலை வாசிக்கலாம்; பெரும்பாலானவர்களுக்கு ஏதோவொரு கணத்தில் தற்கொலை குறித்த எண்ணம் தோன்றத்தான் செய்திருக்கும். அந்த எண்ணத்துக்கு மனம் எவ்வாறெல்லாம் நியாயம் செய்துகொள்ளும் என்ற பார்வையிலும் நாவலை அணுகலாம்.
வாழ்க்கையில் நம்மை விட்டு எல்லாம் போன பின்பும் வாழ்வதற்கான ஒளிக்கீற்றைக் காலம் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கும். சாந்தி அக்காவின் தற்கொலையில் தொடங்கும் நாவல், காணாமல்போன அவன் அப்பாவைக் கண்டடைதலில் முடிகிறது. அவன் அப்பாவின் தரிசனம் இவனது ‘சா’வைக் கொஞ்சம் நீட்டிக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 7/8/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818