பத்து இரவுகளின் கனவுகள்
பத்து இரவுகளின் கனவுகள், நாட்சுமே சொசெகி, தமிழில்: கே.கணேஷ்ராம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.150.
நாட்சுமே சொசெகி: கனவுகளைத் தியானிக்கும் எழுத்து
கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றிபெற்ற வெகு சிலரில் போர்ஹேஸும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள், இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். கனவை இலக்கியமாக்குவதில் போர்ஹேஸுக்கும் முன்னோடி ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவரான நாட்சுமே சொசெகி (1867-1916). ஹருகி முரகாமிக்கு மிகவும் பிடித்த ஜப்பானிய எழுத்தாளர் சொசெகி. முரகாமியின் ‘காஃப்கா கடற்கரையில்’ நாவலின் நாயகனான காஃப்காவுக்கும் பிடித்த எழுத்தாளர் சொசெகிதான் என்று முரகாமி எழுதிய பிறகு, உலகம் முழுதும் அவருடைய படைப்புகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
சொசெகியின் ‘பத்து இரவுகளின் கனவுகள்’ நூல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் மரபில் ஆழமாக வேர்கொண்டிருந்த ஒரு ஜப்பான், மேற்கத்தியக் கலாச்சாரத்தை எதிர்கொள்ளும் ஒரு சந்திப்பில் எழுதப்பட்ட கனவுக் கதைகள் இவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கனவுகள் ஜப்பானிய மரபின் கூறுகளை ஆழமாகக் கொண்டிருக்கின்றன. சாமுராய், புத்த மடம், ஜப்பானியத் தொன்மப் பாத்திரங்கள், ஜென் படிமங்கள், ஜப்பானிய ஆண்டுகள் போன்றவை திரும்பத் திரும்ப இந்தக் கனவுகளில் இடம்பிடிக்கின்றன. சொசெகியின் மொழி நடை எளிமையான, அழகான, கச்சிதமான சொற்களால் கவிதைக்கு அருகில் பல இடங்களில் சென்றிருக்கிறது. ‘வாளின் நுனியை நோக்கிக் கொலைவெறி ஒரு புள்ளியாகச் சுழன்றது’, ‘நீர்ப்பல்லியின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் செம்புள்ளிகளைப் போல் சிவந்திருந்த வரிவடிவங்கள் அவை.’ இவை போன்ற அழகான பல சொற்றொடர்கள் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன.
முதல் கனவில் காதலி இறந்துகொண்டிருக்கிறாள். தான் இறந்த பிறகு சிப்பியொன்றால் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டு, அங்கே அடையாளமாக விண்மீன் துண்டொன்றை நட்டுவைக்கச் சொல்கிறாள். காத்திருந்தால் நூறு ஆண்டுகள் கழித்துத் தான் வருவதாகக் கூறுகிறாள். நாட்கள், ஆண்டுகளின் கணக்கை இழந்து காதலன் காத்திருக்கிறான். மெய் வாழ்க்கையில் சாத்தியமற்ற ஒன்றைக் கனவு வழங்குகிறதல்லவா! ஒருவேளை யதார்த்தத்தின் லட்சிய வடிவம்தான் கனவு வாழ்க்கையோ?
ஒரு கனவில் ‘அகவொளி’ (satori) அடைய விரும்பும் சாமுராய் ‘இன்மை’ என்ற சொல்லைப் பல முறை உச்சரிக்கிறான். அப்படி உச்சரிக்கும்போதெல்லாம் ஊதுபத்தியின் நறுமணம் அவனது நாசியைத் துளைக்கிறது. இனிய மணம்தான். ஆனால், இன்மையை அடைவதற்கு எத்தகைய இடையூறு செய்கிறது. இனிய மணம் என்பதற்குப் பதிலாக ‘இனிய மனம்’ என்று படித்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. மனம்தானே மணம்!
இன்னொரு கனவில், தன் விடுதிக்கு வந்து மதுவருந்தும் கிழவனிடம் ‘எங்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று அந்த விடுதியின் சொந்தக்காரி கேட்கிறாள். அந்தக் கிழவன், ‘நான் அப்பால் செல்கிறேன்’ என்கிறான். படிப்பவருக்கு நொடி நேர ‘அகவொளி’யைத் தரும் பதில் இது. இப்படித்தான் ஜென் குருக்கள் தங்கள் சீடர்களுக்குக் குயுக்தியான பதில்களால் அகவொளியை ஏற்படுத்துவார்கள்.
ஒரு கதையில் அந்தகனாகிய தன் 6 வயது மகனைச் சுமந்து செல்கிறான் ஒருவன். அந்தச் சிறுவன் முக்காலமும் அறிந்த முனிவன்போல் பேசிக்கொண்டே செல்கிறான். கண்ணாடியின் துல்லியத்துடன் எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் அவன், தனது தகப்பனின் ‘கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தின் மீது இரக்கமற்ற ஒளி’யைப் பாய்ச்சுகிறான். கனவின் இறுதியில் அவன் காட்டும் கடந்தகாலம் அவனுடைய தகப்பனின் மீது கற்சிலையாக அழுத்துகிறது.
இரண்டாவது கனவின் சாமுராயால் இன்மையை அடைய முடியவில்லை என்றால், ஆறாவது கனவில் வரும் உன்கேய் சிற்பி இன்மையை அடைந்ததால்தான் பன்னெடுங்காலமாக உயிர்வாழ்கிறான். அந்தச் சிற்பி நியோ சிற்பங்களைச் செதுக்குவதை வேடிக்கை பார்க்கும் பாத்திரமும் மரத் துண்டுகளிலிருந்து நியோ சிற்பங்களைச் செதுக்க முயன்று தோற்றுப்போகிறான். அதற்குக் காரணம் அவனும் இன்மையை அடையவில்லை. தான் இல்லாமல் போகும் சிற்பியால்தான் தனது உளிக்குப் பார்வை கொடுக்க முடியும்; அப்படிப்பட்ட உளியால்தான் எந்த மரத்திலும் சிற்பத்தைப் பார்க்க முடியும். கனவுகளுக்கு அறிவியலர்கள் எந்த விளக்கத்தை வைத்திருந்தாலும் கனவுகளை ஒரு ஜென் தியானம்போல் ஆக்கியிருக்கிறார் சொசெகி. காதல், காலம், மரணம், ஆன்மிகத்தின் உச்சவிழிப்பு (அகவொளி) போன்றவற்றை இந்தக் கனவுகளின் மூலம் சொசெகி தியானித்திருக்கிறார்.
கே.கணேஷ்ராமின் மொழிபெயர்ப்பு அழகாக வந்திருக்கிறது. ‘பைன் மரத்தின் பச்சை இலைப் பரப்பும், வாயிற்கதவின் மினுமினுக்கும் சிவப்பு மெருகுப் பூச்சும், முரண்படும் நிறவேற்றுமையில் முயங்கி அழகாகத் தோற்றமளித்தன’ என்பது போன்ற அழகிய சொற்றொடர்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் உள்ளன. ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் வந்த பிறகும் அழகும் எளிமையும் எஞ்சியிருப்பது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. அதேபோல், புத்தகத் தயாரிப்பு இந்தப் புத்தகத்தை வாசிப்பதை மட்டுமல்லாமல் பார்ப்பதையும் இனிய அனுபவமாக ஆக்குகிறது.
நன்றி: தமிழ் இந்து, 31/7/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031280_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818