சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2)
சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2), குடவாயிற் சுந்தரவேலு, அருள் பதிப்பகம், பக். 352, விலை 160ரூ.
கடலூர், அரியலூர், திருச்சி முதலிய, 11 மாவட்டங்களில் உள்ள பேரூர்கள், சிற்றூர்களை நேரில் சென்று ஆராய்ந்து, அவ்வூர்கள் தொடர்பான தொல்பொருள் சான்றுகள், ஊரின் பரப்பளவு, கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் முதலானவற்றைக் குறிப்பிட்டுள்ள முறை நன்று. ஊரில் உள்ள கோவில்கள், மக்கள் குடியேறிய காலம், ஊர் தொடர்பான சங்க இலக்கியக் குறிப்புகள், சங்க இலக்கியப் புலவர்கள் பற்றிய விளக்கக் குறிப்புகள் தெளிவாக எழுதப்பெற்றுள்ளன. அவை, நூலைப் படிப்போருக்கு ஆர்வமூட்டுகின்றன.
சங்க இலக்கியச் செய்யுள் அடிகளை மேற்கோளாக, சான்றாக காட்டியுள்ளமையால் நூலாசிரியரின் இலக்கியப் புலமை வெளிப்படுகிறது.
கடற்கரைப் பட்டினமாயின் கடற்கரை உள்ள தூரம், அருகில் ஓடும் ஆறு, நவக்கிரகச் சிறப்பு முதலியவை பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளன. அருகில் உள்ள ஊர்களின் பெயர்கள் சுட்டப்பெற்றுள்ளன. குறுந்தொகையில் பரணர் பாடிய, ‘பெண்கொலை புரிந்த நன்னன் போல’ என்ற உவமையை விளக்கியுள்ள முறை சிறப்பு(பக்.190).
அருவா நாடு, பன்றி நாடு, பூழி நாடு முதலிய எந்த எந்த பகுதிகளைக் குறிக்கும் என்ற குறிப்பு (பக். 172) தரப் பெற்றுள்ளது. தொல்காப்பியர், திருவள்ளுவர் பெயர்கள் அப்புலவர்களுக்குப் பிற்காலத்தவர் கூறியன. அவை இயற்பெயர்கள் அல்ல(பக். 15) என்கிறார். ஊரும் பேரும் பிறவும் பற்றி விளக்கும் நல்ல நூல்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்.
நன்றி:தினமலர், 25/3/2018.