சாதி தேசத்தின் சாம்பல் பறவை
சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ.
எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான்.
அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் போல் செய்திகளைத் தொகுத்து எழுதியது அல்ல இது. களத்தில் நின்று, அந்த அனுபவங்களில் இருந்து இதை எழுதியிருக்கிறார் கதிர்.
கட்டுரைகள் என்பதைவிட ‘கள ஆய்வு அறிக்கைகள்’ என்றே சொல்லலாம். நெஞ்சில் கனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் எழுத்து இது. உரிமை மீறல் நடக்கும் இடமெல்லாம் தடம் பதித்துக் கிளர்ச்சி செய்பவர் கதிர். நீதியும் மனிதமும் உருவாவதற்கான தூண்டுதலே இந்தக் கட்டுரைகள். ‘நீதிதான் இலக்கு என்று சொன்னாலும் நீதியைவிட நீதிக்கான பயணத்தில் பலரையும் இணைப்பதுதான் களப்பணியின் ஆன்மா’ என்று சொல்கிறார் கதிர்.
அத்தகைய களப்பணியை நோக்கிப் பலரையும் இணைப்பதற்கான தூண்டுதல், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி.
நன்றி: ஜுனியர் விகடன், 12/4/2017.