சீனப் பெண்கள்
சீனப் பெண்கள் , சொல்லப்படாத கதை, சின்ரன்: தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.316, விலை ரூ.280.
உலகப் பொருளாதார வல்லரசாகப் போற்றப்படும் சீனாவின் மற்றொரு முகத்தை துகிலுரித்துக் காட்டும் உண்மைப் பதிவு இந்நூல். இந்த நூலை எழுதிய காரணத்துக்காவே அதன் ஆசிரியர் சின்ரன் நாடு கடத்தப்பட்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதிலிருந்தே இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடியும்.
உலக அளவில் பொருளாதாரரீதியில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கும் சீனா, இன்னும் தங்கள் நாட்டுப் பெண்களை ஒடுக்கியே வைத்திருக்கும் நிதர்சனத்தை உரக்கக் கூறும் படைப்பாக இந்நூல் விளங்குகிறது.
அடிமைத்தனத்தின் கொடுமைத் தீயில் சிக்கி சிதைந்து போன பல பெண்களின் கண்ணீர் கதைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
சீனாவைப் பொருத்தவரை குடும்பம் என்பது சமூக நிர்பந்தத்துக்கான செயற்கைக் கட்டமைப்பு என்பதையும், அங்கே பெண் என்பவள் பந்தம் இல்லை, வெறும் உணர்வற்ற சதைப் பிண்டம் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன சில பதிவுகள்.
அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்கள், தங்களது முதல் மனைவிகளை எவ்வாறு கைவிட்டு விடுகிறார்கள் என்பது குறித்த சில தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. அவை வளர்ச்சியடைந்த சீனாவின் மறுபக்கத்தில் உள்ள காரிருளை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.
சீனாவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் சீனப் பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது இந்நூல்.
நன்றி:தினமணி, 10/4/2017.