வட்டாராதனை கதை உலகம்

வட்டாராதனை கதை உலகம், மூல கன்னட வடிவம்  சிவகோட்டாச்சார், நவீன கன்னட வடிவம்  ஆர்.எல். ஆனந்தராமய்யா, தமிழில் – தி.சு.சதாசிவம், பாவண்ணன், இறையடியான், சாகித்திய அகாதெமி பதிப்பகம், பக்.253, விலை ரூ.125.

கன்னட மொழியின் முதல் உரைநடை நூல் என்ற பெருமைக்கு உரித்தானது இந்த நூல். மனித வாழ்வின் துன்பங்களைக் கடந்து கடுமையான நெறிகளின் பயனாக விண்ணுலகப் பேறு அடைந்த சமண துறவிகளின் வாழ்க்கையே வட்டாராதனை எனப்படுகிறது.

இந்தக் கதைகள், பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. செய்யுள் வடிவில் கன்னடத்தில் இருந்த அக்கதைகள் நவீன மொழியாக்கத்துக்கு உருமாறி, தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது.

சமண மத ஞானிகள் 19 பேரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அன்றைய காலகட்டத்தில் சமண மதத்தில் ஆழமாகப் பதிந்திருந்த நம்பிக்கைகள் அனைத்தையும் கதைகளின் ஊடே காண முடிகிறது.

நூலில் கையாளப்பட்டிருக்கும் சொல்லாடல்கள் பழங்கன்னடத்தை நினைவுகூர்ந்தாலும், அவற்றின் மையக் கருத்துகள் அனைத்தும் அறநெறிகள் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. புலன்களின் விருப்பங்களைப் புறந்தள்ளி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்த துறவிகளைப் பற்றிய தொன்மைக் கதைகள் என்பதால் அமானுஷ்ய கற்பனைகளும், கருத்துகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி கதைகளின் ஊடே சித்தாந்தங்களும் நிதர்சனங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது கூடுதல் சிறப்பு.

மதங்களைத் தாண்டி மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற அறத்தை எடுத்துரைக்கும் மற்றுமொரு சிறந்த நூலாக இது விளங்குகிறது.

நன்றி:தினமணி, 10/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *