செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்
செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ.
வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் சிந்தனைகளைத் தூண்டும் நூல். சிறப்பான மொழி பெயர்ப்பு.
நூலாசிரியர் நெப்போலியன் ஹில், 12 மகத்தான செல்வங்கள் எனப் பட்டியலிட்டு, நேர்மறை மனோபாவம், நல்ல உடல் ஆரோக்கியம், சகமனிதர்களுடன் நல்லுறவு, பயத்திலிருந்து விடுதலை, சாதிக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை கொள்வதற்கான ஆற்றல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாட்டம், உழைப்பின் மீது காதல், திறந்த மனம் கொள்ளுதல், சுய கட்டுப்பாடு, மனிதர்களைப் புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுதல், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் அறிஞர்களாக இந்த உலகில் உருவெடுத்த மார்கோனி, தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், தொழிலதிபர்களில் தலை சிறந்தவரான வால்டர், கிரிஸ்லர் போன்ற பலர் சாதனையாளர்களாக மலர்வதற்கு, அவர்கள் வாழ்வில் சந்தித்த அவமானங்கள், பிரச்னைகள்,அவற்றில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்குத் துணைபுரிந்த மனஉறுதி, பகுத்தறிதல், கற்பனை வளம், திட்டமிடல் போன்ற மனோரீதியான தத்துவங்கள் ஆகியவை இந்நூலில் 10 அத்தியாயங்களாக இடம்பெற்றுள்ளன.
நேர்மறைப் பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நமக்குச் சொந்தமான மனதை முழுமையாக வசப்படுத்தி, வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் இந்நூல், பலவிதமான பாதிப்புகளையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்து விரக்தியின் விளிம்பில் இருப்போர் அனைவரும் அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
நன்றி: தினமணி, 12/9/2016.