வெற்றித் திருநகர்
வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி.
வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத காரணத்தால் அவள் தன் காதலை இழந்து கன்னியாகவே வாழ்வை முடிக்க நேர்ந்தது அவலம்.
வாள் வலிமையும் தோள் வலிமையும் நிரம்பியவராக இருந்தும், நாகம நாயக்கர் தன் நண்பரின் சூழ்ச்சிக்கு ஆளாகி, தாமும் துன்புற்று மகனுக்கும் துன்பம் தர நேர்கிறது. நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற பெருமனம் படைத்த தலைவர்களாக கிருஷ்ணதேவராயரும் விசுவநாதனும் நாவலுக்குக் கம்பீரம் அளிக்கின்றனர்.
சரித்திர நவீனம் என்பது பழைய வரலாற்று உண்மைகளுக்கு முரண்படாமல் எழுதப்பட வேண்டும்;அவை இக்காலத்துக்கும் பொருந்த வேண்டும். காலம் கடந்து போன பழைய குப்பைகளைப் புரட்டுவது போல் அமைந்தால் படிப்பவர்களுக்குச் சுவை குன்றிவிடும்; எல்லாம் கற்பனையாக அமைந்தால் படிக்கும் ஆர்வம் அற்றுப்போய்விடும்.
விஜயநகரப் பேரரசு கால நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவலின் ஆசிரியர், சரித்திர நாவல்களுக்களுக்கான பல உத்திகளைத் திறம்படக் கையாண்டு இத்துறையில் வல்லவராய் பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: தினமணி, 12/9/2016.