செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்
செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு; காவ்யா, பக்.318; ரூ.320;
ஐம்பொன்னில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்படும் திருவுருவத்தை செப்புத் திருமேனி என்பர். தொடக்கத்தில் இறைவன் உருவங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் அரசர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் திருமேனிகளையும் செப்புத் திருமேனிகளாக வடித்தனர்.
தமிழகத் திருக்கோயில்களில் இடம்பெறும் கலைப் பாணிகளை வரலாற்று நோக்கில் வகைப்படுத்தி விளக்கியுள்ளார் ஆய்வாளர். பண்டைக் காலத்தில் சிற்பக்கலை இருந்ததற்கான சான்றுகளை சிலப்பதிகாரத்தைக் கொண்டும், சங்க காலத்தில் உலோகங்களால் திருமேனிகள் செய்யப்பட்டதை நன்னன் என்ற அரசனின் வரலாறு கொண்டும் விளக்கியுள்ளது சிறப்பு.
பல்லவர், சோழர், முற்கால, இடைக்கால, பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் உலோகத் திருமேனிகள், படிமங்கள், கல்வெட்டுச் சான்றுகள் போன்றவற்றை செப்புத் திருமேனிகள் வரலாறும் கலைப்பாணியும் என்ற இயலும்; ஆனந்தத் தாண்டவரான நடராஜர் செப்புத் திருமேனியில் உள்ள திருக்கைகள், வாசி, முயலகன், திருவடிகள், நிலா, சிலம்பு, துடி, சடைமுடி, அபயகரம், பாம்பு முதலியவற்றையும், ஐந்தெழுத்தில் நடனம் புரிவதையும் ஆடல்வல்லானின் நடனத் திருக்கோலங்கள் இயலும் விளக்குகின்றன.
மேலும், உற்சவப் படிமங்கள், உலோக வகைகள், பஞ்சலோகக் கலவை, உலோகச் சிலை வார்ப்பு வகைகள், மெழுகு வடித்தல், உலைக்கூடம், கண் திறப்பு, சாதனங்கள், செய்முறை போன்றவற்றை செப்புத் திருமேனிகள் வார்த்தெடுப்பும் செய்முறையும் விளக்குகிறது.
ஆடற்கலையின் இலக்கணங்களை ஓர் இயலும், செப்புத் திருமேனிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடை, அணிகலன்கள், ஆயுதங்களின் இலக்கணத்தை மற்றொரு இயலும் விரித்துரைக்கின்றன. செப்புத் திருமேனிகள் உருவாக்கப்படும் விதங்களை படங்கள் மூலம் விளக்கியிருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி,4/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818