சிங்காரவேலவர்

சிங்காரவேலவர், பா.வீரமணி, சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ.

அறிவியல் சிந்தனை வளர விரும்பியவர்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்நுால், சிங்காரவேலரின் ஆற்றல்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறது. சிங்காரவேலர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, ஒவ்வொரு தகவலும் ஆசிரியரால் நுண்ணிய நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நுால் சிங்காரவேலருக்கு இருந்த பேரும் புகழும் பற்றிய எளிய நடையில் கட்டுரையாசிரியர் எழுதிச் செல்கிறார். திரு.வி.க., சிங்காரவேலரின் மாணாக்கராகத் தம்மை வரித்துக் கொண்டதை தம் வாழ்க்கைக் குறிப்பில் குறித்திருப்பதை நுாலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

பவுத்தத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தவர். தம் இல்லத்தில் மகாபோதி சங்கம் அமைத்து, திங்கள் தோறும் பவுத்த கொள்கைகளை விளக்கியும், மூடநம்பிக்கைக்கும், ஜாதி வேற்றுமைக்கும் எதிராக கருத்துக்களைப் பரப்பியவர் அவர். அச்சங்கத்தில் அயோத்திதாசர், லட்சுமி நரசு ஆகியோர் பங்கேற்றிருக்கின்றனர்.

சமயங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் விடுதலையை வலியுறுத்தியவர். மதங்களிடையே வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற கருத்தை விதைத்தவர்களில் அவரும் ஒருவர். அதுகுறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்க்கியக் கொள்கையிலும் உடன்பாடு கொண்டிருந்தவர்.

தமிழரிடையே அறிவியல் சிந்தனை வளர வேண்டும் என்பதற்காகப் பல கட்டுரைகளைத் தீட்டியவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக, ஈ.வெ.ரா., கொண்டு வந்த காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தை ஆதரித்து முழக்கமிட்டவர்.

கான்பூரில் நடந்த பொதுவுடமை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய அவர், தலித் பற்றியும், தீண்டாமை பற்றியுமான தம் உரத்த சிந்தனைகளை முன்வைத்தவர்.

இதழாசிரியராக இருந்து அவர் எழுதிய கருத்தோட்டங்கள் முக்கியமானவை. ‘தி இந்து’ இதழில், மகாத்மா காந்திக்குத் திறந்த மடல் என்ற ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை.

தொழிலாளன், தோழர், புது உலகம் ஆகிய இதழ்களை நடத்தி வந்தவர் அவர். அவற்றின் வழி தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதியவர்.

அவர் சிறந்த பேச்சாளர் என்பதைச் சிங்காரவேலரின் சொற்பொழிவுகள் என்னும் பெயரில் நுாலாக வந்துள்ளதன் மூலம் அறியலாம். மொத்தத்தில், நுாலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

 

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

– ராம.குருநாதன்

நன்றி: தினமலர், 29/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *