சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு
சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு, முனைவர் சு.சசிகலா, காவ்யா, பக். 272, விலை 280ரூ.
இப்பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்த சித்தர்கள், இறைவன் உன்னுள்ளே உள்ளான் என்ற அகவழிபாட்டு நெறியை, சமயம் கடந்த நிலையில் விளக்கியுள்ளனர். அண்டம் அனைத்தும் பரவியிருக்கும் பரம்பொருள் மனித உடலுக்குள்ளும் இருக்கிறது என்பதையே, ‘அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் உள்ளது’ என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் தமிழில் யோகம், மருத்துவம், ஞானம், ரசவாதம் போன்றவற்றை நுட்பமாக விளக்கியுள்ளனர். பதினெண் சித்தர்கள், உரோம ரிஷி, கருவூரார் வரலாற்றையும், அவர் தம் படைப்புகளையும், அவர் தம் படைப்புகளில் ஐம்பூதங்களின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் தத்துவத்தின் அடிப்படையிலும் இறை கோட்பாடு அமைந்து கிடப்பதை இந்நுால் விரிவாக விளக்குகிறது.
உதாரணமாக, பத்திரிகிரியார் எல்லா ஆதாரங்களுக்கும் மூலமாக உள்ள இடத்தில் கணபதி எனும் தெய்வம் உறைவதை, ஆதார மூலத்தடியில் கணபதியை பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்?’ எனக்கூறி, கணபதியின் பாதங்களை பணிந்தால் ஆதாரங்கள் ஆறினையும் அறிய முடியும் என்று கூறுகிறார். சித்தர்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கும் பயனுறு நுாலாக இவ்வாய்வு நுால் திகழ்கிறது.
-– புலவர்.சு.மதியழகன்
நன்றி: தினமலர், 3/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818