சித்தர் வழி
சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம், பக்.312, விலை ரூ.200.
சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது கட்டுரைகளில் ஆசிரியர் அற்புதமாக விளக்கியுள்ளார்.
சுவாசத்தை ஒழுங்குபடுத்தும் நுட்பம் அறிந்த சித்தர்கள் யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உடல், மனத்தின் கூறுகளைக் கொண்டே இந்த அண்டசராசரத்தை அறியும் நுட்பத்தையும் தெரிந்து இருந்தனர்; மனித உடலைத் தொண்ணூற்றாறு தத்துவமாகச் சித்தர்கள் கண்டனர். தேவ உலகில் சஞ்சரித்து வீடுபேறு பெறுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது என்பதை பல இடங்களில் சித்தர் பாடல்களின் மூலம் நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
அகத்தியர் தொடங்கி ராமனின் குருவான வசிட்டர், வள்ளலார் வரை தமிழ்ப் பெரும்தெய்வமான முருகப் பெருமானைப் போற்றியும், துதித்தும் வந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏக இறைவனை ஏற்ற சித்தர்கள், இந்த மனிதகுலம் மேம்பட வந்தவர்களாகவும், சமயம், சாதி, வர்ணம், ஆசாரம், மூடநம்பிக்கைகளை வீழ்த்த வந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்பது சித்தர் நெறி. அதுவே சிறந்த வழி என்பதை அறிய பக்திநெறியில் திளைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
நன்றி: தினமணி, 23/3/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818