சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை
சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை, ஜக்மோகன் எஸ்.பன்வர், தமிழில்: கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.125.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுந்தர் பிச்சை. சென்னை ஜவஹர் வித்யாலயா, வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐஐடி மாணவரானது, அங்கே தன்னுடன் பயின்ற மாணவியான அஞ்சலி ஹர்யானியைக் காதலித்தது, அவரையே மணந்து கொண்டது உள்ளிட்டவை தவிர, சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்கள் இந்நூலில் குறைவே.
உலக அளவில் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆகும் திறமை சுந்தர் பிச்சைக்கு எப்படி வந்தது? சிறுவயதில் விளையாட்டு, பொழுதுபோக்கு எதுவுமில்லாத “புத்தகமும் கையும்’ ஆக உள்ள மாணவராக அவர் இருந்தது, ஒருமுறை தொலைபேசியில் எண்களை டயல் செய்தால் அவற்றை மறக்காத அவருடைய நினைவுத் திறன், மின்னணுத்துறைக்கென ஐஐடியில் பாடத்திட்டம் எதுவுமில்லாத காலத்திலேயே சிலிக்கானில் மற்ற பொருள்களின் மூலக்கூறுகளை எடுத்து மாற்றி வைத்து அதன் தன்மையை மாற்றுவது தொடர்பான ஆய்வுக்கட்டுரையை அவர் எழுதியது எல்லாமும் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை சுந்தர் பிச்சை மாணவப் பருவத்திலேயே அமைத்து வந்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூகிளைக் கைவிட்டு விட்டு பிங்கைத் தேடல் எந்திரமாக மாற்றிக் கொண்டதால் கூகிள் நிறுவனம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. ஆனால் சுந்தர் பிச்சை தனது முயற்சியால், அந்நிலையை மாற்றியது, கூகிள் க்ரோம் ப்ரவுஸரை உருவாக்கியதில் சுந்தர் பிச்சைக்கு உள்ள பங்கு என கூகிளின் வரலாற்றோடு சுந்தர் பிச்சையின் வரலாறும் இணைந்து செல்வதை இந்நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. முன்னேறத் துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நூல்.
நன்றி: தினமணி.