சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.

மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தச் சிந்தனைகள், இலக்கியம், அரசியல் சிந்தனைகள், உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு போன்ற உயர்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடாக விளங்கினார்.

பாரதியும் அதே சிந்தனை வசப்பட்டு இருந்ததால், சுவாமிஜியின் செயல்பாடுகளை அறிந்து அவர் மீது அளப்பரிய மரியாதை பாரதிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு பாரதி பல பத்திரிகைகளில் சுவாமி விவேகாந்தரின் பெருமை பேசும் கட்டுரைகளை எழுதினார்.

பாரதி ஒருவரை பாராட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில், அவரது பாராட்டு இரண்டு பெரும் நூல்களாக வெளிவந்துள்ளது. சுவாமிஜியின் பெருமைகளுக்கு பெரும் சான்றாகும். இந்நூல் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் பாரதியார் 1906 முதல் 1920-ஆம் ஆண்டு வரை சுவாமிஜி குறித்து கூறியவை. 2-ஆம் பகுதியில் பாரதியார் – நிவேதிதை சந்திப்புப் பற்றிய நிகழ்ச்சியின் தொகுப்பு. 3-ஆம் பகதியில் பாரதியின் பல்வேறு படைப்புகள் ‘இந்தியா’ பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டதின் தொகுப்பு.

4-ஆம் பகுதி ஆய்வு நோக்கில் அமைந்த அபூர்வமான பல கட்டுரைகளின் தொகுப்புகள். எல்லாமே படிப்பவர்களின் மனதை களிப்படைய செய்பவையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 8/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *