தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.296, விலை ரூ.200.

தொல்காப்பியம்தான் தொன்மையான முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. எம்மொழி இலக்கணத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம். இந்நூலிலும் முப்பெரும் அதிகாரங்கள் உள்ளன.

எழுத்திலக்கணத்தில், எழுத்துகள் உருவாக்கம், எண்ணிக்கை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மாத்திரை, போலி முதலியவற்றைக் கூறும் எழுத்தியல் பற்றியும்; பகுபதம், பகாபதம் போன்ற பகுபத உறுப்புகள், உறுப்பிலக்கணம் போன்றவற்றைக் கூறும் பதவியல் பற்றியும்; எழுத்துப் புணர்ச்சி பற்றி புணரியலிலும்; பெயரியல் வினையியல், பொதுவியல், இடையியல், உயிரியல் ஆகியவை சொல்லிலக்கணத்திலும்; பொருளதிகாரத்தில், அகம்-புறம், அகத்திணை, புறத்திணை, பொழுதுகள், ஐவகை நிலங்கள், முப்பொருள்கள் ஆகியவையும்; யாப்பிலக்கணத்தில் அணி இலக்கணம் போன்றவற்றையும் எளிமையாக விளக்கிக் கூறுகிறது.

செம்மொழிக்கான தகுதிகள், வலி மிகும்-மிகா இடங்கள், பிழை திருத்தம், நிறுத்தற் குறிகள், மரபுச் சொற்கள், வாக்கியப் பிழைகளைத் தவிர்க்கும் வழிகள், ஒற்று மிகும் இடங்கள், துணை எழுத்துகளின் பயன்பாடு, தொகைச் சொற்கள், செய்வினை, செயப்பாட்டு வினை முதலியவை பின் இணைப்புகளில் தரப்பட்டுள்ளது சிறப்பு. தவறில்லாமல் தமிழ் எழுதவும், பேசவும் விரும்புபவர்களிடம் இருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 8-1-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *