தமிழ்க் கவிதையியல்
தமிழ்க் கவிதையியல், தொகுப்பாசிரியர்: இரா.சம்பத், சாகித்திய அகாதெமி, பக்.608, விலை ரூ.440.
சாகித்திய அகாதெமி சார்பில் “தமிழ்க் கவிதையியலும் யாப்பும்’ என்ற பொருண்மையில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வ.ஞானசுந்தரம், தமிழவன், செ.வை.சண்முகம், தி.இராஜரெத்தினம், ப.திருஞானசம்பந்தம் போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையான யாப்பிலக்கணத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரு திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகிறது ஒரு கட்டுரை.
யாப்பின் அடிப்படையில் கவிதை எழுதுவதற்கு சொல் வளம் அவசியம். அந்தச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு நிகண்டுகளைக் கற்பதும் அவசியம். காரணம், நிகண்டுகள் பொருண்மைக்கு ஏற்ற சொற்களைப் பட்டியலிடுகின்றன.
நிகண்டுகளைக் கற்பதன் அவசியத்தை ‘யாப்பு உருவாக்கமும் நிகண்டு கல்வி மரபும்’ என்கிற கட்டுரை வலியுறுத்துகிறது.
தமிழ் மலையாள யாப்பியல் குறித்தும் ஒரு கட்டுரை உள்ளது. மலையாள மொழியில் மணிப்பிரவாளத்தின் இலக்கணம் கூறும் நிலையில் எழுந்த “லீலாதிலகம்’ என்ற நூல் இரண்டு நிலைகளில் மெய்ப்பாடுகளைக் கூறி, அவற்றுள் மெய்ப்பாட்டுக் குற்றங்கள் எவையெவை எனவும் பட்டியலிடுகிறது.
சங்க அகப்பாடல்களில் உள்ள உள்ளுறை, இறைச்சி, குறிப்பு பற்றி விரித்துரைக்கும் கட்டுரையும்; ஒலி(எழுத்து)யிலிருந்து கவிதையியல் வரை, உவம வகைகள், தமிழ் அகப்பொருள் கல்வி மரபும் தமிழ்க் கவிதையியலும், புறநானூற்று பழைய உரையும் செம்பதிப்பும், நவீன தமிழ்ப் பெண் கவிஞர்களின் பெண் எழுத்து, தமிழ்க் கவிதை இயலில் இடம்பெறும் ‘மாட்டு’ முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. மரபுக் கவிதையோ, புதுக் கவிதையோ அவற்றை படைப்பவர்கள், படிக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 28/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818