தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ
தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்.336, விலை ரூ.275.
கி.பி.1780- இல் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து 47 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தவர் தாமஸ் மன்றோ. அவர் சேலத்தில் கலெக்டராக இருந்த ரீடு என்பவருக்கு உதவியாளராக – உதவி கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களில் அக்காலத் தமிழ்நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன.
தாமஸ் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பெண்களின் நிலையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
விவசாயிகளுக்கு நேரடியாக நிலத்தை அளித்து, தீர்வைத் தொகையை நேரடியாக அரசாங்கம் வசூல் செய்யும்முறையான ரயத்துவாரி முறையின் தந்தையாக மன்றோ திகழ்ந்திருக்கிறார். இயந்திர நெசவு பெரும் அளவு அக்காலத்தில் இங்கிலாந்தில் வளராதநிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களை கும்பினியாரின் ஏஜெண்டுகளான துபாஷ்கள், கட்டாயப்படுத்தி நெசவு செய்து தரச் சொன்னதும், மறுப்பவர்களுக்குச் சிறைதண்டனை தருவதுமான நிலை இருந்திருக்கிறது.
நெசவாளர்களுக்குத் துணியை நெய்வதற்காகத் தரும் பணத்தை முழுவதும் தராமல் ஏமாற்றுவது. முதல் தர துணியை இரண்டாம் தரத் துணியாக மதிப்பிட்டு பணத்தைக் குறைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. தாமஸ் மன்றோ இந்நிலையை மாற்ற தனது மேலதிகாரியான ரீடுவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி அதிகம்; இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி குறைவு என்றிருந்த நிலையை மாற்றவும் தாமஸ் மன்றோ குரல் கொடுத்திருக்கிறார்.
சில பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போல சர்வாதிகாரமாக நடந்து கொள்ளாமல், மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவராக மன்றோ திகழ்ந்திருப்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 25/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818