தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு, விலை 290ரூ.

கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்… இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள்.

அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் வாடுகிறாள்.

எப்போதும் அவனைப் பற்றியே சிந்தித்து, அவனைப் பற்றிய கதைகளை மட்டுமே கேட்டு வளர்கிறாள், ஒரு கு(சு)ட்டிப் பெண்! அவள் தான் நாம் அனைவரும் அறிந்த, ஆழ்வார்களில் ஒரே பெண் என்ற சிறப்புக்குரிய கோதை ஆண்டாள்.

ஆண்டாள், துளசி செடிக்கு அருகில் இருந்து பெரியாழ்வாருக்கு கிடைத்தாள்; அவள் பெரியவளாகி தன் தந்தையைப் போலவே தமிழ்ப் பாசுரங்கள் பாடினாள். பிறகொரு நாள் கண்ணனிடமே சென்று ஐக்கியமானாள் என்று சிறு பகுதியாகத் தான் அவளின் வரலாறு இதுவரை எழுதப்பட்டிருக்கிறது.

அவள் எப்படி வளர்ந்தாள், என்னவெல்லாம் கண்ணனிடம் பேசினாள், பூஜித்தாள், போற்றினாள் என, அவள் வாழ்வின் பெரும்பகுதி எழுதப்படாத வெற்றுக் காகிதமாகவே இருந்திருக்கிறது.

இப்போது இந்த, ‘தமிழச்சி ஆண்டாளின்’ கதை மூலம் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்நுாலாசிரியர் ப்ரியா கல்யாணராமன், ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்துாருக்கே சென்று அங்குள்ள ஜீயரிடம் விபரங்கள் சேகரித்து எழுதியிருக்கிறார்.

பெரியாழ்வாரின் ஊராகிய ஸ்ரீவில்லிபுத்துாரின் கதை, அந்த ஊரின் முந்தைய பெயர், அதற்கான வரலாறு, பெரியாழ்வாருக்கு அந்தப் பெயரை விஷ்ணு சூட்டிய கதை என, ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரலாற்றுப் பின்னணியுடன், நிறைய கதைகளைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆண்டாளைக் கொஞ்சும்போதெல்லாம் அவரின் தந்தை பெரியாழ்வார் மெளவல், சேடல், செம்மல் என்று அப்போது புழக்கத்தில் இருந்த, இப்போது வேறு பெயர்களில் உள்ள காட்டு மல்லி, அடுக்கு மல்லி, பவழ மல்லி போன்ற பூக்களின் பெயரைச் சொல்லி கொஞ்சும் போது, நமக்கு பூக்கள் வாசனையுடன் அந்தக் கோதை ஆண்டாள் குழந்தையாக அருகில் இருப்பது போலவே தோன்றுகிறது.

நுால் முழுக்கவும் கோதை ஆண்டாள் நிறைய கதை கேட்கிறாள்; அவளும் பெரிய மனுஷி கணக்காக கதை சொல்கிறாள்.

சுட்டி ஆண்டாளின் அத்தனை சேட்டைகளையும் பெரியாழ்வாரும், அவரின் மனைவி வீரஜாதேவியும் எப்படி சமாளிக்கின்றனர், அவள் கேள்விக்கணைகளால் மற்றவரை எப்படி திணறடிக்கிறாள் என்பதை எல்லாம் அறிய வேண்டுமானால், நுால் உங்கள் கரங்களில் இருக்க வேண்டும்.

நன்றி: தினமலர், 20/1/2019.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *