தமிழகத்தில் முஸ்லிம்கள்
தமிழகத்தில் முஸ்லிம்கள், எஸ்.எம்.கமால், அடையாளம் பதிப்பகம், பக். 180, விலை150ரூ.
வரலாற்று ஆய்வாளரான இந்நூலாசிரியர், தாம் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தவிர விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், உள்ளிட்ட 18 நூல்களை இயற்றியவர். அந்த வகையில் தமிழக முஸ்லிம்களைப் பற்றி வரலாறு, இலக்கியம், செப்பேடு போன்ற தளங்களிலிருந்து அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலை இயற்றியுள்ளார்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்புகள், அதற்குப் பிறகு அரபுநாட்டில் இஸ்லாம் உருவாகி இந்தியாவிற்கு குறிப்பாக முதலில் தமிழகத்திற்கு வந்த விபரம். இங்கே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களிடையே ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, பட்டாணிகள், தக்னிகள் போன்ற பெயர் கொண்ட இஸ்லாமிய சமுதாயங்கள் உருவான விபரம், வணிகம், அரசியல், பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பு, பிற சமய மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நிலவிய உயரிய நட்புறவு மற்றும் பழக்க வழக்கங்கள், நபிகள் நாயகம் காலத்திலேயே நபித் தோழர்கள் மற்றும் இறையடியார்கள் சிலர் தமிழகத்திற்கு வந்து இறைப்பணியாற்றி, இங்கேயே மரணித்தால் உருவான அடக்கஸ்தலங்கள் பற்றிய விபரங்கள், தமிழகத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் குடியிருந்ததால், அவர்களின் அடையாளப் பெயர்களுடன் உருவான ஊர்கள், 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் சதவிகிதக் கணக்கு இப்படி பல தகவல்கள், தகுந்த ஆவண சான்றுகளுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள முஸ்லிம்களைப் பற்றி வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்.
நன்றி: துக்ளக், 21/8/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029682.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818