தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம் சமகால எதிர்வினைகள் (இதழ்கள்)
தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம் சமகால எதிர்வினைகள் (இதழ்கள்), மு.வையாபுரி, பல்லவி பதிப்பகம்,பக்.229, விலை ரூ.170.
ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தாம் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது என்று கூறும் நூலாசிரியர், அப்படி உருவான புனைகதை வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது என்கிறார்.
ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காகவே முதலில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன என்றாலும், சமயம், கல்வி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு வரலாறுகளையும் அக்காலப் பத்திரிகைகளான உதயதாரகை (1841), நற்போரகம் (1849), கலாவர்த்தினி (1869), ஜனவிநோதினி (1875) உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு வந்தன. அதற்குப் பிறகு பாரதமணி, ஆனந்தபோதினி, பாரதி, குமரன், பூர்ண சந்திரோதயம், மணிக்கொடி, நவசக்தி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல இதழ்கள் வெளிவந்தன.
அக்காலத்தில் வெளிவந்த நாவல்களைப் பற்றி, காட்டுத்தீபோல் காமக் கிளர்ச்சியை எழுப்பி இன்னல் விளைவிப்பவையாக கருதிய குமரன், சதங்கை ஆகிய இதழ்கள் (1923 -24), தீய நாவல்களை வாசித்தல் கூடாது என்று பிள்ளைகளைப் பெற்றோரும், மனைவியை நாயகனும், மாணவியை ஆசிரியரும் அழுத்தமாகக் கண்டித்தல் வேண்டும் என்று கூறுகின்றன.
காகிதத்தைக் கரியாக்கிக் கற்றையாய்க் கட்டிவிட்டால், அதற்குப் புத்தகம் என்ற பெருமை அந்த மாத்திரையிலேயே வந்துவிட்டதென்று எண்ண வேண்டாம் அக்காலத்தில் வெளிவந்த சில புத்தகங்களைப் பற்றி சக்தி (1940) இதழ் இப்படி விமர்சிக்கிறது.
ஆங்கிலத்தில் வெளிவந்த வெட்பரேட் நாவலைத் தழுவி தமிழில் மதுவிலக்கு மங்கை நாவலை பெ.கோ.சுந்தரராஜன் எழுதியிருந்தார். அதைப் பற்றி தழுவி எழுதுதல் தப்பு என்பதற்கு இன்னொரு ருஜு. இதை நேராக அப்படியே மொழிபெயர்த்துவிட்டால் என்ன குறைந்துவிடுகிறது? என்று மணிக்கொடி இதழ் கேட்கிறது.
இவ்வாறு அக்காலப் படைப்புகளைப் பற்றி அக்கால இதழ்களில் வெளிவந்த விமர்சனங்களை வாசிக்கிறபோது, அக்காலத்தின் தொடர்ச்சியாக இப்போதுள்ள பல சிந்தனைகள் இருப்பது வியப்பூட்டுகிறது.
நன்றி: தினமணி, 12/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818