டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை
டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை, எஸ்.ராமதுரை, தமிழில் – கி.இராமன், கிழக்கு பதிப்பகம், பக். 456, விலை ரூ.550.
டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தியவரும், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான ராமதுரையால் எழுதப்பட்டது இந்நூல். தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நூறு மணி நேரம் பேசினாலும்கூட கிடைக்காத உத்வேகத்தை தனித்து நின்று ஜெயித்துக் காட்டிய ஒருவரது கதை தந்துவிடும் என்பதை உணர்த்தும் நூல் இது. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், அருகம்புல் அளவில் தொடங்கியது முதல் ஆலமரமாக கிளை பரப்பியது வரை கடந்து வந்தத் தடைகளையும், அதைத் தகர்த்தெறிந்த முறைகளையும் நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர்.
சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஐபிஎம், அக்சசஞ்சர், ஹெச்.பி. போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு உலகின் முன்னணி நிறுவனமாக டிசிஎஸ் உயர்ந்த கதை, லட்சியங்களை வகுத்து நடைபோடும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
2010-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக டிசிஎஸ் வளர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2009-இல் அது சாத்தியமாக்கப்பட்டது. ஊழியர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 5 லட்சத்தைக் கடந்ததுடன் 42 நாடுகளில் டிசிஎஸ் நிறுவனம் தனது கிளைகளைப் பரப்பியிருக்கிறது. 15 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய், தற்போது 22 பில்லியன் டாலர்களாக உச்சம் தொட்டிருக்கிறது.
இத்தனை வெற்றிக்குப் பின்னாலும், நிறுவனம் கடந்து வந்த சோதனைகள் என்ன என்பதும் நூலில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. காற்றோடு இசைந்து செல்வது அல்ல பட்டம், அதனை எதிர்த்து உயரே செல்வதற்குப் பெயர்தான் பட்டம் என்ற ஒற்றை வரியில் வெற்றியின் மந்திரத்தை டிசிஎஸ் நிறுவனத்தின் பெயரால் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள் மட்டுமல்லாது, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
நன்றி: தினமணி, 18/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958405/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818