தத்துவ தரிசனங்கள்

தத்துவ தரிசனங்கள், பத்மன், கிழக்கு பதிப்பகம், பக். 352, விலை 300ரூ.

கடவுள் உண்டா, இல்லையா என்ற வாதம் உலகம் தோன்றிய காலந்தொட்டே நடந்து வருகிறது. இது தொடர்பான ஆராய்ச்சியை பாரத நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும் மேற்கொள்வதுடன் அந்தந்த காலத்தில் சில தத்துவங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாத்திகம் பேசும் சார்வாகம், பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்னும் லோகாயதம், ஆன்மாவை ஏற்கும் சமணம், சாங்கியம், வாழ்வியலை போதிக்கும் பௌத்தம், அணுக்களின் சேர்க்கையாலேயே உலகம் என்று விவரிக்கும் வைசேஷிகம், காரண – காரியங்களை அலசும் நியாயம், உடல், மனக் கட்டுப்பாடுகளைச் சொல்லும் யோகம், வேள்விகளே ஆதாரம் எனும் மீமாம்சை, அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், கடவுள் வழிபாட்டைக் கொண்ட சைவம், வைணவம் உள்ளிட்ட 6 மதங்கள், அதன் பின்னர் தோன்றிய பக்தி இயக்கங்களின் தோற்றம், அதை நிறுவியவர், அதன் கோட்பாடுகள் முதலியவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

இப்போதைய விஞ்ஞானிகளின் கூற்றை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகள் கூறியுள்ளதை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு.

எத்தனை மதங்கள் இருந்தாலும் முக்தி என்பதே எல்லாவற்றின் அடிப்படை ஆகும். ஆதலால், கருத்து வேறுபாடு இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அடிநாதம் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

நன்றி: தினமணி, 13/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *