திகம்பர நினைவுகள்
திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120.
புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள்.
புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து ஒலித்த அந்தக் காலப் பாடல்கள், அம்மாவிடம் கடுதாசி எழுத வரும் பெண்களின் உணர்வுக் கோலங்கள், அம்மாவிடம் கேட்ட பஞ்ச காலத்துக் கதைகள், பயம்காட்டும் பாம்புக் காணி, ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டும் சாமர்த்தியம், பள்ளி சென்று வீடு திரும்புகையில் வயல்வெளியின் நடுவே வழிமறித்து நின்ற தாட்டான் குரங்கு, கடல் பார்வைகள், இளமையிலேயே ஒட்டிக்கொண்ட வாசிப்புப் பழக்கம், அதனால் அமைந்த பெண் தோழமைகள், மறுப்பு, இத்யாதி என்று தன் வாழ்வின் மறக்க முடியாத கணங்களை மட்டுமின்றி, இருட்பக்கத்தையும் துணிவோடு பகிர்ந்திருக்கிறார் தேவகாந்தன்.
குறிசொல்லும் சாஸ்திரி, கள்ளிறக்கும் சின்னப்பு, பக்கத்துக் காணி நடேசன் மாமா, அவரது மகள் இந்திராணி, வாழ்வின் அலைக்கழிப்புகளால் வழிதவறிப்போன செம்பருத்தி, தினம் ஒரு பூ சூடும் அரிய மலர், சந்நதக்காளியான லெட்சுமி என எல்லோரும் நம் நினைவுகளையும் நிறைக்கிறார்கள். போரடி என்கிற தேங்காய்ச் சண்டை விளையாட்டு ஒரு கட்டுரையில் நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
கண் முன்னால் நடந்த தந்தையின் கொலை, இளம் வயதில் நீதிமன்றக் கூண்டில் சாட்சியாய் நின்றது, எதிர்கொண்ட குறுக்குக் கேள்விகள், மேல்முறையீடு, கடைசியில் தள்ளுபடி என தேவகாந்தனின் இளமைக் கால அனுபவம் நீதிமன்ற நடைமுறைகளின் உலகப் பொதுமைக்கு மேலும் ஒரு கசப்பான உதாரணம். முறிகண்டிப் பிள்ளையார் கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் சென்றபோது, அப்பாவின் கைச்சங்கிலி காணாமல் போன நினைவொன்றும் இத்தொகுப்பில் உண்டு.
அந்நினைவின் வழியே, சமூக நம்பிக்கைகளின் வேராகக் கதைகள் இருப்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் தேவகாந்தன். உள்ளூர் வேலிகளைப் பற்றிப் பேசும்போதே யாழ்ப்பாணத்தின் கிடுகுவேலிக் கலாச்சாரத்தையும் ஒப்பிடுகிறார். எழுத்தாளரின் இளம்பிராயத்து நினைவுகள் சமூகப் பகுப்பாய்வுகளாகவும் மாறுகின்ற தருணங்கள் அவை. இக்கட்டுரைகள் உண்டாக்கும் உணர்வுகளின் தாக்கம் வலிமையானது. வளர்ந்த மண்ணைப் பிரிந்து வாழ நேரும் வலியையும் கூடவே அது உணரவைக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 12/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818