திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி
திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி, பொன்.செல்லமுத்து; மணிவாசகர் பதிப்பகம், தொகுதி: 1- பக்.240; விலை ரூ.250; தொகுதி: 2.பக்.256; விலை ரூ.250; தொகுதி: 3, பக்.240; விலை ரூ.250.
கவிஞர் வாலி 1959 முதல் 2013 வரை திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாக இந்த மூன்று தொகுதிகளும் இருக்கின்றன. 1959 முதல் 1980 வரை 297 படங்களுக்கும், 1981 முதல் 1990 வரை 405 படங்களுக்கும், 1991 முதல் 2013 வரை 372 படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இந்த பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள், அவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்படம் வெளிவந்த ஆண்டு, அந்த திரைப்படங்களில் நடித்த நடிகர்கள், பாடல்களைப் பாடிய பாடகர்கள் எனப் பாடல்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இத்தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வாலி பாடல்கள் எழுதிய திரைப்படங்களில் பிற கவிஞர்கள் பாடல்கள் எழுதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
பாடல் எழுதும்போது இசையமைப்பாளர்களுக்கும் கவிஞர் வாலிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள், சம்பவங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. வாலி எழுதிய பாடல்களில் காணப்படும் தமிழ் யாப்பிலக்கணக் கூறுகள் பற்றியும் &நூலாசிரியர் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது.
கவிஞர் வாலி எழுதி மக்கள் மனதில் இடம் பெற்று முத்திரை பதித்த பாடல்கள் எவை? கவிஞர் வாலி எழுதிய நூல்கள், நாடகங்கள், கதை – வசனம் எழுதிய திரைப்படங்கள், அவர் நடித்த திரைப்படங்கள், வாலியைப் பற்றி பிறர் எழுதி வெளிவந்த நூல்கள் என கவிஞர் வாலி குறித்த தகவல்களை பல்வேறு விதங்களில் இந்நூல் தொகுத்தளிக்கிறது.
தமிழ்த் திரைப்படம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள்,  திரைப்பட ஆர்வலர்கள், இளம் பாடலாசிரியர்கள்,இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் இத்தொகுதிகள் உள்ளன.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818