தித்திக்கும் நினைவுகள்
தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ். ஏ.ஆர்.சீனிவாசன் வெளியீடு, பக். 296, விலை 200ரூ.
இந்நூலாசிரியர் நாடகம், சினிமா, சின்னத்திரை போன்றவற்றில் பிரபலமானவர். வக்கீலுக்குப் படித்தவரும் கூட. இவர் தனது 50 வருட கலைத்துறை அனுபவத்தை அமுதசுரபி இதழில் தொடராக எழுதியபோது அது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்நூலில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவத்திலிருந்து தொடங்கும் ஆசிரியர், அடுத்து சிவாஜி, ஜெயலலிதா, சோ, நாகேஷ், மனோரமா, இயக்குனர் ஸ்ரீதர், எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், வாலி, கே.பி. சுந்தராம்பாள், சின்னப்பதேவர், சந்திரபாபு, சிவக்குமார் என்று மூத்த கலைஞர்கள் பலரைப் பற்றிய தனது அனுபவங்களையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் உள்ள பல தகவல்கள் இதுவரைநாம் அறிந்திராதவை.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரையுலகில் போட்டியாளர்களாகத் திகழ்ந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இருந்த நட்பும், பாசமும் அலாதியானது. ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மிகுந்த பாசத்தோடு சிவாஜிக்கு கன்னத்தில் முத்தமிட, அருகிருந்த நம்பியர் தனக்கும் முத்தம் கேட்க, எம்.ஜி.ஆர்.சிரித்தவாறே அவருக்கும் முத்தம் கொடுத்த நிகழ்ச்சி படிக்க நெகிழ்ச்சியானது.
அதுபோல், ஒரு படப்பிடிப்புக்காக சோ பெங்களூரில் இருந்தபோது, சென்னையில் காமராஜ் மறைந்துவிட்டார் என்ற செய்தி, எதற்கும் கலங்காத சோவை எந்த அளவுக்குக் கலங்க வைத்தது என்பதைப் படிக்கும்போது அவருக்கு காமராஜ் மீதிருந்த பற்றை உணரச் செய்கிறது.
திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்துப் புகழ் பெற்ற நாகேஷுக்கு, அப்படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ஏன் அழைப்பு அனுபப்படவில்லை என்ற தகவல் இந்நூலில் உண்டு. இப்படி ஒவ்வொரு சம்பவங்களும், படிக்க விறுவிறுப்பாக உள்ளதோடு, அரிய புகைப்படங்களுடனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது, பாராட்டத்தக்கது.
நன்றி: துக்ளக்
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818