தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்
தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ.
தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது.
சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, இறைச்சிப் பொருளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் நுாலாசிரியர். இந்த ஒப்பீட்டு ஆய்வுக்குத் துணையாக சில சங்க இலக்கியப் பாடல்களையும் எடுத்துக் காட்டுகிறார்.
பிராய்டின் சிந்தனைகளில் தொல்காப்பியத்தையும், தொல்காப்பியச் சிந்தனையான உள்ளுறை, இறைச்சியில் பிராய்டியத்தையும் பொருத்திக் காட்டி, ஒரு புத்தின்பத்தை அளிக்கிறது இந்நுால். ஒரு பாடலே உள்ளுறை, இறைச்சி என இரண்டும் அமைய வருவது உண்டு. அவ்வாறு இல்லாத பாடலுக்கும், பிராய்டு நோக்கில் உள்ளுறை, இறைச்சிப் பொருளைக் காணலாம் என்கிறார்.
தொல்காப்பியமும், பிராய்டியமும் வெவ்வேறு காலத்தியன எனினும், எல்லாக் காலத்திலும் மனிதனது உளச் செயல்பாடுகள் ஒன்றே என்பதைக் காட்டும் நுால்.
நன்றி: தினமலர், 29/12/2019
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029832.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818