இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750.

இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் கி.பி.1012 இல் இளவரசனாகப் பொறுப்பேற்றிருக்கிறான்.

வடக்கே வங்காளதேசம் முதல் தெற்கே குடமலை நாடு வரை படையெடுத்துக் கைப்பற்றியிருக்கிறான். கடாரம் வென்ற சோழமன்னனும் இவனே. கடல் வழியாகச் சென்று லட்சத் தீவு, மாலத்தீவு ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கிறான். இராஜேந்திர சோழன் வென்ற பகுதிகளைப் பற்றியும் அதற்கான ஆதாரங்களைப் பற்றியும் மிக விரிவாக இந்நூல் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், கங்கை கொண்ட சோழீச்சரம் உள்ளிட்ட பல கோயில்களை எழுப்பியிருக்கின்றான். ஏற்கெனவே உள்ள கோயில்களை புதுப்பித்திருக்கிறான். உதாரணமாக திருவொற்றியூர் ஆதி புரீஸ்வரர் திருக்கோயிலில் கருவறை அமைத்ததை, திருவாரூர் வீதிவிடங்கர் திருக்கோயில் செங்கல் கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றியதைக் கூறலாம்.இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வரி வசூலிப்பு, அதை பயன்படுத்திய முறை ஆகியவை பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

கி.பி.1024-25-இல் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கியது, அதற்கான காரணங்கள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அமைப்பு ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் வரலாற்றை பல துல்லியமான சான்றாதாரங்களுடன் விளக்கும் அரிய முயற்சி இந்நூல்

நன்றி: தினமணி, 20/1/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *