உடலும் உணவும்

உடலும் உணவும், டாக்டர் எஸ். அமுதகுமார், தினத்தந்தி பதிப்பகம், பக். 400, விலை 250ரூ.

தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய ‘உடலும் உணவும்’ என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது.

அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது நல்லது என்பன போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு எளிமையான முறையில் அரிய தகவல்களை தருகிறார்.

காலை உணவின் அவசியம், வைட்டமின்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகள், எந்த எண்ணெய் நல்லது, தசைப் பிடிப்பின் காரணங்கள், இதயம் பற்றிய எச்சரிக்கை, பற்களின் பாதுகாப்பு, சாப்பிட்டவுடன் தூங்குவதால் நெஞ்செரிச்சல் என உடல் பற்றிய கலைக்களஞ்சியமாக இந்த நூல் காணப்படுகிறது.

சரிவிகித சத்துணவு, நார் சத்து நிரம்பிய உணவுகள், ரத்தசோகை, கேழ்வரகின் மகத்துவம், ரத்தக் கொதிப்பு, பூண்டு–ஓர் அருமருந்து, மலச்சிக்கல், சருமப் பாதுகாப்பு, குழந்தையின்மை போன்ற 60 தலைப்புகளில் நாம் அவசியம் அறிந்து கொண்டு செயல்படுத்தக்க்கூடிய நுட்பமான செய்திகள் அடங்கியுள்ளன.

மருத்துவத் தகவல்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமலும் வழங்குகிறார்.

இதில் இல்லாத மருத்துவ செய்திகள் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை கருத்துகளையும் கொடுத்துள்ளார். சரியான உணவுகளைச் சாப்பிட்டு முறையாக உடலைப் பேணுவதற்கான வழிகாட்டி இந்த நூல் என்றால் அது மிகையல்ல.

நன்றி: தினத்தந்தி, 11/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *