உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள்,  ஜெ.ஜெயசிம்மன்,டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150.

சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வெனெட்ஸ்கி என்பவர் எழுதிய டேல்ஸ் எபவுட் மெட்டல் என்கிற நூலின் தமிழாக்கம் இது.

நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் பற்றியும், நாம் அதிகம் அறிந்திராத இலிதியம், பெரிலியம், நையோபியம், ஜிர்க்கானியம் போன்ற உலோகங்கள் பற்றியும் விரிவாகவும், சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

பொன்னைப் பற்றிக் கூறும்போது, பொன்னாசையால் பெரும் துன்பத்துக்கு ஆளான மைதாஸ் (மிடாஸ்) கதையைக் கூறியிருப்பது, வெள்ளியைப் பற்றிக் கூறும்போது மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தபோது அவனது படைவீரர்களுக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தை விளக்கியிருப்பது, இலிதியம் என்ற உலோகத்தைப் பற்றிக் கூறும்போது இந்தியாவில் கண்ணாடியை உணவு போல் சாப்பிடக் கூடிய யோகிகளைப் பற்றிக் குறிப்பிடுவது (நாமே தினமும் ஒரு கிராமில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுள்ள கண்ணாடியைச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோமாம்), கோபாலது பற்றிக் கூறும்போது, பிரபல வேதியாளரும் மருந்தாளுனருமான பாராசெற்கஸ் மேஜிக் செய்து மக்களைக் கவர்ந்ததைக் கூறியிருப்பது போன்றவை வாசிப்பனுபவத்தைக் கூட்டி கதை படிக்கும் உணர்வைத் தருகின்றன.

குறிப்பாக தண்டலம் என்ற உலோகத்தைப் பற்றிக் கூறும்போது, தண்டலஸ் என்ற மன்னன் தனது பிள்ளையைக் கறி சமைத்து தெய்வத்துக்குப் படைத்தான் என்று கூறியிருப்பது, நம்மூர் சிறுத்தொண்டர் கதையை நினைவூட்டி வியக்க வைக்கிறது.

உலோகங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் எளிய நூல்.

நன்றி: தினமணி,23/7/2018

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *