உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்
உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம், பக்.238, விலை ரூ.225.
சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. ஓர் அதிகாரத்துக்குப் பத்து குறள் வீதம் பத்து அதிகாரங்களில் நூறு குறட்பாக்கள் அமைந்துள்ளன. காப்புச் செய்யுளாக ஒரு குறட்பா உள்ளது. முதல் ஐந்து அதிகாரங்கள் திருவருளைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த ஐந்து அதிகாரங்கள் திருவருளால் கிட்டும் பயன்களைப் பேசுகின்றன. திருக்குறளில், மனிதர்கள் இவ்வுலகில் பெற வேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. திருவருட்பயனில் மனிதன் பெற வேண்டிய முக்கிய பேறான வீட்டு நெறி குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நூலில் உவமைகளின் வழியே சைவ சித்தாந்த உண்மைகளை எளிமையாக விளக்குகிறார் ஆசிரியர். அதற்கேற்ப உரையும் மிக எளிமையாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
சைவமும் தமிழும் பிரிக்கவொண்ணாதவை என்பதை உணர்த்தும் நன்னூல்.
நன்றி: தினமணி, 1/12/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818