உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள், ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், கோபாலஸ்வாமி, ப்ளு ஓசன் புக்ஸ் பிரிசம் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், விலை 180ரூ.

பாரபட்சமான உலகில், ஆராதிக்கப்படாமலும், அங்கீகாரம் கிடைக்காமலும் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் சாதனையாளர்களின் சாகசங்களை விவரிக்கிறது இந்நுால்.

இச்சாகசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள துன்பங்களை எல்லாம் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் துளியிலும் மிகச் சிறிது என்பதை உணர முடிகிறது.

‘பல்மனரி பைப்ரோசிஸ்’ நோயால் அவதிப்பட்டுக் கொண்டே, பிராண வாயு மூகமூடியை அணிந்து, ‘நிகழ் காலத்தில் வாழ்வதும், மகிழ்ச்சியாக இருப்பதும்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திய ஆயிஷா சவுத்ரியின் வாழ்வைப் படிக்கும்போது, ‘வாழ்க்கையை அனுபவியுங்கள் – இறப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது’ என்னும் ஆண்டர்சென் என்ற எழுத்தாளரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

‘ரெடிநிஸ் பிக்மேண்டோ சா’ என்னும் கண் நோயால் பாதிக்கப்பட்ட அங்கித் ஜிந்தால், வணிக மேலாண்மை பட்டம் பெற்று, பின்னாளில் மின்னணு கழிவுப் பொருட்களை எப்படி உபயோகிப்பது, எப்படி அகற்றுவது என்பதற்கு ஒரு வணிகத் திட்டம் வழங்கி, ‘விப்ரோ’ நிறுவனத்தில் பணியாற்றி, மாற்றுத் திறனாளிகளுக்காக, ‘வீல்ஸ் ஆப் சேஞ்ச்’ என்னும் நிறுவனத்தைத் துவங்கியவர், மத்திய அரசிடம் இருந்து, ‘ஹெலன் கெல்லர்’ விருது பெற்றவர்.பிறந்தபோதே, ‘செரிபரல் பால்சி’ என்ற கடும் நோயால் உடல் பாதிக்கப்பட்டு, ஒரு பொம்மையைப் போல் செயலற்று இருப்பான்; இவனிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என, மருத்துவரால் கைவிடப்பட்ட அஷ்வின் கார்த்திக், பின்னாளில் இந்தியாவின் பெருமூளை வாதம் மற்றும் முடக்குவாதத்தோடு இருக்கும் முதல் மென்பொறியாளர்.

இவர், ‘ரோபட்’ எனப்படும் மனித இயந்திரங்களை நடைமுறைப்படுத்தும், ‘சொல்யூஷன் ஆர்கிடெக்ட்’ பதவியில் இருந்ததோடு மட்டுமின்றி, திரைப்பட பாடலாசிரியராகவும் மிளிர்ந்தார்.

உடலிலும், உள்ளத்திலும் விலை மதிக்க முடியாத மிக உன்னதமான ஆற்றலைக் கொண்ட மன உறுதி, மனிதனை எவரெஸ்ட் உயரத்திற்கு உயர்த்தும் என்று அறிய முடிகிறது.

– புலவர் சு.மதியழகன்

நன்றி: தினமலர்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *