வ.ரா. கதைக் களஞ்சியம்

வ.ரா. கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.864, விலை ரூ.850.

சிறந்த எழுத்தாளரான வ.ரா. எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்ற அளவுக்கு, அவருடைய படைப்பிலக்கியங்கள் அறியப்படவில்லை. அவற்றைத் தேடிப் பிடித்துத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள்.

தமிழில் வட்டார நாவல் என்ற ஒரு பிரிவு அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே (அன்றைய ஒன்றிணைந்த) தஞ்சை மாவட்ட மக்களின் பேச்சு மொழியையும் வாழ்க்கை முறையையும் தனது நாவல்களில் பதிவு செய்திருக்கிறார் வ.ரா. குறிப்பாக, ‘சுந்தரி 39 ’ நாவலில் இடம் பெறும் பூமரத்தாங்குடி, உளுத்தங்காடு ஆகிய இரு ஊர்களும் அவற்றில் வசிக்கும் சுந்தரி, மார்க்கண்ட ஐயர், சட்டாம்பிள்ளை, கந்தன், செல்லம்மாள் ஆகியோரின் வாழ்வியல் பண்புகளும் அச்சு அசலாகப் பதிவாகியுள்ளன.

பால்ய விவாகம் (11 வயது) செய்யப்பட்டு ஸ்த்ரீ ஆகும் முன்பே விதவை ஆகிவிட்ட சுந்தரி என்ற இளம் பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை இது. எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை என்பதே இல்லாத இயல்பான நடை. நகைச்சுவை உணர்வு . ‘அட39’ என்று புருவத்தை உயர்த்த வைக்கும் திருப்பம் (குறிப்பாக கதையின் இறுதியில் பூமரத்தாங்குடி சுப்பராயர் எழுதி வைத்திருக்கும் உயில்) – இவைதான் வ.ரா.

‘சுந்தரி 39’ தவிர, ‘சின்னச் சாம்பு 39’, ‘விஜயம்39’, ‘கோதைத் தீவு 39’ ஆகிய நாவல்களும், கற்றது குற்றம் 39’ என்ற தலைப்பில் நான்கு சிறுகதைகளும், ‘கிளிக்கூண்டு 39’ கதையும், ‘ராமானுஜர் 39’ பற்றிய நாடகமும் இடம்பெற்றுள்ளன.

வ.ரா. வெறும் பொழுதுபோக்குக்காக கதை எழுதவில்லை. இவரது கதைகளில் பெண் கல்வி, பகுத்தறிவு போன்றவையும் (சுந்தரி), விதவையின் துயரமும் (விஜயம்), முற்போக்குச் சிந்தனைகளும் (சின்னச் சாம்பு) ஊடும்பாவுமாக பின்னியிருக்கின்றன.இவை தவிர, தன்னுடைய கதைகளுக்கு வ.ரா.எழுதிய முன்னுரைகளும், வ.ரா.நாவல்களுக்கு தி.ஜ.ர., த.நா.சேனாபதி ஆகியோர் எழுதியுள்ள முன்னுரைகளும் கூட இடம் பெற்றுள்ளன.

வ.ரா. வெறும் கட்டுரையாளரல்லர், சிறந்த சமூக சீர்திருத்தப் படைப்பிலக்கியவாதி என்பதை நிறுவும் நூல்.

நன்றி: தினமணி, 17/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *