வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ.

அரிவாள் மணையில் நறுக்கிய மீன்

பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் படம்பிடிக்கிற கதைகள். தேசம் இரண்டுபட்டபோது அகதிகளாக வந்து வேர்பிடிக்க முயன்றவர்கள் சந்தித்த பரிதாபகரமான நிலையைக் கண்முன்னால் காட்டுகிறது தேபேஷ்ராய் எழுதிய ‘அகதி’ சிறுகதை.

சத்தியவிரதனா, அனிமாவா அல்லது அந்தப் பெயர்களில் வேறு யாருமா என்று சுயத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அலைபடுகிற கதை. அண்மையில் மறைந்த மகாஸ்வேதா தேவி எழுதிய ‘பாலூட்டிகள்’ கதை, தம் வயிற்றில் பிறக்காத ‘ஐயா வீட்டுப் பிள்ளைகளுக்கும்’ பாலூட்டும் தாயாக விளங்கிப் புற்றுநோய்க்கு இரையாகும் யசோதா தேவியின் பரிதாபமான சாவு கண்கலங்க வைக்கிறது.

‘யசோதா ஈஸ்வர ஸ்வரூபிணி, இந் உலகில் மனிதன் ஈஸ்வரனாக இருந்தால் அவனை எல்லோரும் விட்டுவிடுவார்கள். அவன் தனியாகத்தான் சாகவேண்டும்’ என்று எழுதுவதில்தான் எத்தனை அழுத்தம்! ப்ரஃபுல்ல ராய் எழுதிய ‘ஏழாவது கல்யாணம்’, அடித்தட்டு மக்கள் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக எத்தனை பரிதாபகரமான சோதனைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்கிற உருக்கமான கதை.

சாம்பியாவுக்கு ஓர் ஆண் துணை வேண்டும், பாதுகாப்புக்காக வேணும்! அதற்காக அவள் ஏழுமுறை திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. கிராமங்கள் அழிந்து நகரமயமாவதன் அவலங்களைச் சொல்கிறது அமலேந்து சக்ரவர்த்தி எழுதியுள்ள கோவர்தன காண்டாவின் கதை. இதிலும் தேசப் பிரிவினையைப் பற்றிய குமுறல் வெளிப்படுகிறது.

‘வெள்ளையர்கள் நாட்டைவிட்டுப் போகும்போது அரிவாள்மணையில் பெரிய மீனை நறுக்குவதுபோல் முழு தேசத்தை இரண்டாக வெட்டிவிட்டுப் போனபின் தலையிலிருந்து சில மக்கள் வால்பக்கமும், வாலிலிருந்து சில மக்கள் தலைப்பக்கமும் வந்தார்கள்’ தன்னுடைய பூர்வீகமான நிலத்தை ‘ஜயாமார்’களின் நகரமயமாக்கும் தேவைக்கத் தர மறுத்து முப்பத்தைந்து ஆண்டுகள் போராடிச் செத்துப்போகிறான் காண்டாக்கிழவன். உடனே பிள்ளைகள் அந்த நிலத்தை விற்று வீட்டு மனைகளாக்கிவிடுகிறார்கள். ‘இன்று 1982ம் ஆண்டு ஐயாமார்களின் கனவின்படி கட்டப்பட்ட சாந்தி கிராமம், குளம்குட்டை, வயல், காடு மேடு இல்லாத ஒரு பூரணமான நகரம்’ என்று எழுதுகிறார்.

சையத் முஸ்தபா ஷிராஜ் எழுதியுள்ள ‘மாடு’ கதை இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படுகிற ஒரு செய்தியைச் சொல்கிறது. ஆனால் இங்கே ‘பசுவதை’ இல்லை. ஹஹாரூன் ஆலி என்றி ஹாராயும், அவனுடைய மனைவியும் தங்களுடைய குழந்தைகளைப்போல் அருமையாக வளர்க்கிற தனா, மனா என்ற பெயரிலான காளைகள். ஒரு மாட்டின் இறைச்சியைச் சாப்பிட வைக்கிறார் விருந்தளிக்கிற ஹாஜியார். அது நோய்வாய்ப்பட்டு விற்கப்பட்ட தன்னுடைய மாட்டின் இறைச்சிதான் என்று தெரியவருகிறபோது பதறித் துப்புகிறான் ஹாராயி. ‘எனக்கு என்னோட மவனோட மாமிசத்த சாப்டக் கொடுத்திட்டீங்க’ என்று கதறுகிறான்.

இந்தக் கதையில் ஒரு சுவாரஸ்யமான தகவல். பதர் ஹாஜி வெல்லம் காய்ச்சுகிற கரும்பு விவசாயி. மக்காவிலிருந்து கொண்டுவந்த புனிமான ‘ஜம்ஜம்’ ஊற்றுநீரைக் கொதிக்கும் கரும்புச் சாற்றில் கொஞ்சம் தெளித்தாலே போதுமாம். ‘சாறு தங்கமாக மினுக்கும். பதர் ஹாஜியின் பேச்சைப்போல் இனிக்கும்.’ ‘நல்ல தேங்காய் எண்ணெய் கிலோ பன்னிரண்டு ரூபாய். ஒரு கிலோ கடுகுத்தோலி அறுபதுபைசா. மாட்டுக்கு வேண்டிய தவிடு ஒரு கிலோ ஒரு ரூபாய்’ என்கிற பொருளாதார நிலவரம் இன்றைக்கு வியப்பான செய்தியாயிருக்கும்.

மணி மணியான கதைகள் பெ. பானுமதியின் அழகான, இயல்பான தமிழ் மொழியாக்கத்தையும் பாராட்ட வேண்டும்.

நன்றி: கல்கி, 25/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *